
கோலாலம்பூர், ஜூலை-22- கிழக்குக் கடற்கரை மாநிலம் ஒன்றில், இல்லாத சாலைப் பராமரிப்புத் திட்டம் தொடர்பான மோசடியில் சிக்கி, நிறுவன இயக்குனர் ஒருவர் 10 மில்லியன் ரிங்கிட்டைப் பறி கொடுத்துள்ளார்.
அது குறித்து புகார் பெறப்பட்டுள்ளதாக Brickfields மாவட்டக் காவல் துறைத் தலைவர் உதவி ஆணையர் Hoo Chang Hook தெரிவித்தார்.
சம்பந்தப்பட்ட அந்த நிறுவன இயக்குனர் 2024-ஆம் ஆண்டில் ஒரு நபரைச் சந்தித்துள்ளார். அந்த நபர் கிழக்குக் கடற்கரை மாநிலம் ஒன்றில் கூட்டு முயற்சியின் மூலம் சாலைப் பராமரிப்புத் திட்டத்தைப் பெறுவதற்கான வாய்ப்பை வழங்கியுள்ளார்.
அதனை நம்பி சந்தேக நபரின் தனிப்பட்ட கணக்கிற்கு அந்த நிறுவன இயக்குனர் மொத்தம் 10 மில்லியன் ரிங்கிட் தொகையை இரண்டு தவணைகளாகச் செலுத்தியுள்ளார்.
இருப்பினும், 2025-ஆம் ஆண்டு அத்தகைய திட்டம் எதுவும் இல்லை என்பது அவருக்குத் தெரிய வந்தது. அது குறித்து சந்தேக நபரிடம் விளக்கம் கேட்ட போது, அவர் பல்வேறு சாக்குப்போக்குகளைக் கூறியுள்ளார்.
அதன் பிறகுதான் தாம் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து அந்த நிறுவன இயக்குனர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததாக Hoo Chang Hook தெரிவித்தார்.
விசாரணைகள் இன்னும் ஆரம்பக் கட்டத்திலேயே இருப்பதால், இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்றாரவர்.



