
ஈப்போ, ஆகஸ்ட் 5 – ஈப்போ, தஞ்சோங் ரம்புத்தானிலுள்ள ஒரு பராமரிப்பு மையத்தில் தங்கியிருந்த 54 வயது ஆண் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, அந்த மையத்தின் பராமரிப்பாளர் உட்பட ஐந்து பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
நேற்று பிற்பகல் சுமார் 2 மணியளவில், தஞ்சோங் ரம்புத்தான் சுகாதார நிலைய பணியாளர்கள் பாதிக்கப்பட்டவர் உயிரிழந்ததை உறுதிப்படுத்தினர்.
ஆரம்ப விசாரணையில் அவரது உடலில் பல்வேறு காயங்களின் அடையாளங்கள் கண்டறியப்பட்டதாக பேராக் மாநில போலீஸ் தலைவர் டத்தோ முகமட் அல்வி சைனல் அபிடின் (Mohd Alwi Zainal Abidin) தெரிவித்தார்.
உயிரிழப்பிற்கான உண்மையான காரணத்தையும், சம்பந்தப்பட்ட ஒவ்வொருவரின் பங்கையும் கண்டறிய போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் உடற்கூறு பரிசோதனை நடத்தப்படவுள்ளதுடன், இவ்வழக்கு மலேசிய தண்டனைச் சட்டம் பிரிவு 302-இன் கீழ் (கொலை) பதிவு செய்யப்பட்டு விசாரிக்கப்படுகிறது.
இதனிடையே, சம்பவம் தொடர்பாக உறுதிப்படுத்தப்படாத தகவல்களை பரப்பவோ, ஊகங்களை வெளியிடவோ வேண்டாம் என பொதுமக்களுக்கு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.



