உலகக் கிண்ண காற்பந்து போட்டிக்கு முன்னதாகவே காயத்திலிருந்து பிரேசிலின் நெய்மர் குணமடைவார்

மோரிஸ்டவுன், ஜூன்-9-உலகக் கிண்ண காற்பந்துப் போட்டியின் தொடக்க ஆட்டங்களில் பங்கேற்பாரா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியிருந்த பிரேசிலின் நெய்மர் ( Neymar )தற்போது கால் தசை காயத்திலிருந்து நன்றாக குணமடைந்து வருகிறார்.
பிரேசிலின் காற்பந்து வரலாற்றில் அதிக கோல் அடித்தவரான நெய்மர் , திங்களன்று எம்.ஆர்.ஐ ஸ்கேன் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார்.
அவர் சிகிச்சையில் நல்ல முன்னேற்றம் கண்டு வருகிறார் என்பது அந்த சோதனையில் தெரியவந்துள்ளதாக பிரேசில் காற்பந்து அணி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், அமெரிக்காவில் நடைபெறும் போட்டியில் கார்லோ அன்செலோட்டியின் அணிக்காக அவரால் பங்கேற்க முடியும் என்ற நம்பிக்கையும் எழுந்துள்ளது.
“பிரேசில் அணியின் மருத்துவ ஊழியர்களால் திட்டமிடப்பட்டபடி, அவர் குணமடைவதற்கான கால அட்டவணையையும் உடற்பயிற்சி திட்டத்தையும் தொடர்ந்து பின்பற்றுவார் என்று பிரேசில் காற்பந்து சம்மேளனம் தெரிவித்துள்ளது.
கடந்த மாத இறுதியில் நெய்மருக்குக் கால் தசைப் பகுதியில் காயம் இருப்பது கண்டறியப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, போட்டித் தொடருக்காகத் தனது உடற்தகுதியை மீட்டெடுக்க அவர் தீவிரமாகப் பணியாற்றி வருகிறார்.
பிரேசில் அணி தனது தொடக்க ஆட்டத்தில் சனிக்கிழமையன்று நியூ ஜெர்சியில் மொராக்கோவுக்கு எதிராக விளையாடவிருக்கிறது.
தற்போது 34 வயதாகும் நெய்மர் கடந்த மூன்று உலகக் கிண்ண காற்பந்து போட்டியிலும் பிரேசில் குழுவின் முக்கிய விளையாட்டாளராக திகழ்ந்தார்.



