
கோலாலம்பூர், ஜூன்-9-அண்மையில் Aidiladha விடுமுறையின்போது
ஒரு குடும்பம் விமானத்தில் ஏற அனுமதிக்கப்படாத சம்பவத்தைத் தொடர்ந்து, ஏர்ஏசியா நிறுவனம் பகிரங்க மன்னிப்பு கோரியதுடன் , சிறப்புத் தேவைகள் உள்ள பயணிகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் புதிய, அனைவரையும் உள்ளடக்கிய SOP எனப்படும் சீரான நிர்வான நடைமுறைகளையும் அறிமுகப்படுத்தியுள்ளது.
மே 26 ஆம் தேதியன்று சிங்கப்பூரிலிருந்து கூச்சிங்கிற்கு சென்ற AK 1776 விமானத்தில் அந்தக் குடும்பம் எதிர்கொண்ட சிரமங்கள் குறித்து விமான நிறுவனம் ஒரு விரிவான ஆய்வை முடித்த பிறகு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
இந்த விவகாரத்தினால் ஏற்பட்ட சிரமங்களுக்காக நிர்வாகம் அந்த குடும்பத்திடம் மன்னிப்பு கோரியதாக ஏர் ஆசியா எக்ஸ் குழுமத்தின் தலைமைப் பாதுகாப்பு தர அதிகாரி கேப்டன் சரவணன் சுப்ரமணியம் தெரிவித்தார்.
அந்த நேரத்தில் நடைமுறையில் இருந்த பாதுகாப்புத் தேவைகள் மற்றும் நிர்வாக நடைமுறைகளுக்கு இணங்க இந்த முடிவு எடுக்கப்பட்டாலும், எந்தவொரு பயணியையும் பயணம் செய்வதிலிருந்து தடுப்பது ஏர் ஆசியா எக்ஸ்ஸின் நோக்கமாக ஒருபோதும் இருந்ததில்லை என்று அவர் கூறினார்.
சிறப்புத் தேவைகள் உள்ள பயணிகளுக்கு சிறந்த ஆதரவை வழங்குவதற்கான செயல்முறைகளை மேம்படுத்த இந்தச் சம்பவம் எங்களுக்கு ஒரு வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதோடு , (SOP) நடைமுறை தற்போது ஒப்புதலுக்காக அதிகாரிகளிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.
இதனிடையே சம்பந்தப்பட்ட பயணியான ஷரிபா எல்லா வான் வஹாப்
(Syarifah Ella Wan Wahab ) தனது நன்றியைத் தெரிவித்ததோடு, மாற்றத்திற்கான ஏர்ஏசியாவின் அர்ப்பணிப்பை, தனது குடும்ப நலன்களுக்கு அப்பாற்பட்டு அனைவரையும் உள்ளடக்கும் செயல்திட்டத்திற்கான ஒரு பெரிய வெற்றி என்று விவரித்தார்.
சிறப்புத் தேவைகள் உள்ள பயணிகள் உட்பட, ஆறு மாதங்கள் மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய நபர்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட குழந்தை பாதுகாப்பு சாதனங்கள் (CRDs) இப்போது ஏற்றுக்கொள்ளப்படுகின்றன என்ற உறுதிப்படுத்தலே மிகவும் முக்கியம் என்று ஷரிபா எல்லா கூறனார்.



