
ஊழல் ஒழிப்புப் போராட்டத்தில் MACC-யும் என் கண்காணிப்பிலிருந்து தப்ப முடியாது – மாமன்னர் கடும் எச்சரிக்கை
கோலாலாம்பூர், பிப்ரவரி-16,
நாட்டில் ஊழலை வேரறுக்கும் போராட்டத்தில் போலீஸ், குடிநுழைவு, சுங்கத்துறை உள்ளிட்ட எந்தவோர் அரசு நிறுவனமும் தமது கண்காணிப்பில் இருந்து தப்ப முடியாது என, மாமன்னர் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஊழல் தடுப்பு ஆணையமான MACC-யாகவே இருந்தாலும் கூட அதில் விதிவிலக்கு கிடையாது என, சுல்தான் இப்ராஹிம் திட்டவட்டமாகக் கூறினார்.
“ஊழல் என்பது மக்களின் நம்பிக்கைக்குத் துரோகம் செய்வதாகும். எந்த நிலையிலும் இதனை சகித்துக் கொள்ளமுடியாது” என இதுவரை விடுத்ததிலேயே மிகக் கடுமையான எச்சரிக்கையை ஃபேஸ்புக் பதிவில் அவர் வெளியிட்டார்.
இடைத்தரகர்கள், உபகரணங்கள்- சீருடை – மருந்து மாத்திரை போன்ற அத்தியாவசியப் பொருட்களைத் தருவிப்பவர்களும் தப்பிக்க முடியாது; அனைவருமே கண்காணிப்பு வளையத்தில் உள்ளதாக சுல்தான் இப்ராஹிம் கூறினார்.
“நான் எதையும் அறியவில்லை என்று மட்டும் நினைக்க வேண்டாம்; எனக்கென்று தனியாக உளவாளிகள் உள்ளனர் என” மாமன்னர் நினைவுறுத்தினார்.
பொறுப்புகளை நேர்மையாக நிறைவேற்றத் தவறும் அதிகாரிகள் உடனடியாக மாற்றப்படலாம்; அந்தப் பொறுப்பை நேர்மையும் தகுதியும் வாய்ந்தவர்கள் ஏற்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஊழல் மற்றும் கடத்தல் நடவடிக்கைகளை முறியடிப்பதில் அக்கரைக் காட்டாத அமுலாக்க அதிகாரிகள் ஒதுங்கிகொண்டு மற்றவர்களுக்கு வழிவிட வேண்டுமென, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் எச்சரித்த சில நாட்களில் மாமன்னரின் அறிக்கை வந்துள்ளது.



