கோலாலம்பூர், ஜூலை 17 – டிக் டோக் பிரபலம் ஏஷா என்ற ராஜேஸ்வரியின் தாயார் புகார் செய்ததன் தொடர்பில் வர்த்தகர் ஒருவரிடம் போலீசார் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர். அந்த நபரிடம் அண்மையில் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாக செந்தூல் OCPD அகமட் சுகர்னோ முகமட் ஷஹாரி தெரிவித்தார். மேலும் இந்த வாரத்தில் நாங்கள் மற்றொரு நபரையும் தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்பட்ட பெண் போலீஸ்காரரிடமும் வாக்குமூலம் பெறவிருக்கிறோம் என அவர் கூறினார்.
ராஜேஸ்வரியின் தாயாரான 56 வயதுடைய புஷ்பா ராஜேகோபால் செய்த புகாரைச் தொடர்ந்து அந்த மூவரும் விசாரணைக்கு அழைக்கப்படுவார்கள் என இதற்கு முன் சுகார்னோ கூறியிருந்தார். பலருக்கு எதிராக இதற்கு முன் புஷ்பா புகார் செய்திருந்தார். சமூக வலைத்தளத்தில் தனது மகள் தொடர்பான பகடி வதை குறித்து அவர்கள் விவாதித்து வருவதோடு பொதுமக்களிடையே அவர்கள் குழப்பத்தை ஏற்படுத்திவருவதாக புஷ்பா புகார் செய்திருந்தார். டிக் டோக்கில் பிரபலமாக திகழ்ந்து வந்த ராஜேஸ்வரி, சமூக வலைத்தளங்களில் சிலர் பகடிவதை செய்ததைத் தொடர்ந்து மனமுடைந்து தனது உயிரை மாய்த்துக் கொண்டார். தாம் இறப்பதற்கு முன் டாங் வாங்கி போலீஸ் நிலையத்தில் செய்திருந்த புகாரில் தனக்கு எதிராக மிரட்டல் விடுத்த இருவரின் பெயர்களையும் ராஜேஸ்வரி குறிப்பிட்டிருந்தார்.