Latestமலேசியா

கடன் விவகாரத்தில் செந்தூலில் பெண்ணைக் கடத்தியக் கும்பல் கைது

கோலாலம்பூர், பிப்ரவரி 16 – கோலாலம்பூரில் பெண்ணொருவர் கடத்தப்பட்டு 10 மணி நேரங்கள் பிணைப் பிடித்து வைக்கப்பட்டிருந்த சம்பவத்துக்கு, போதைப் பொருள் தொடர்பான பேரமே காரணம் எனக் கண்டறியப்பட்டுள்ளது.

கடந்த திங்கட்கிழமை மாலை 5 மணியளவில் ஜாலான் செந்தூலில் பல்பொருள் கடையொன்றின் முன்புறம் வைத்து தமது மனைவி கடத்தப்பட்டதாக ஆடவர் கொடுத்த புகாரின் அடிப்படையில், காவல் துறை களத்தில் இறங்கிய போது அது அம்பலமானது.

அக்கடையின் ஊழியரான அப்பெண்ணை, திடீரென காரில் வந்திறங்கிய நால்வர் கொண்ட கும்பல், பிடித்து காருக்குள் இழுத்து கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கிருந்து மாயமாகியது.

சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சிகள் கொடுத்தக் கூடுதல் தகவல்களைக் கொண்டு துப்புத் துலக்கியதில், புக்கிட் டாமான்சாராவிலும் செந்தூலிலும் அதிகாலை 3 மணிக்கு மேற்கொண்ட சோதனையில் அக்கும்பல் பிடிபட்டது.

காவல் துறை விரைந்து செயல்பட்டதில், கடத்தப்பட்ட பெண் எந்தவொரு காயமும் இன்றி செந்தூலில் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாக செந்தூல் மாவட்ட போலீஸ் தலைவர் அகமட் சுகார்னோ முகமட் ஜஹாரி சொன்னார்.

கடத்தப்பட்ட பெண்ணின் கணவர், போதைப் பொருள் விவகாரத்தில் தனது நண்பரிடம் கடன் வைத்துள்ளார்; அதனைத் திரும்பப் பெறும் முயற்சியாகவே, அந்த நண்பர் அக்கடத்தலை அரங்கேற்றியது போலிஸ் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.

மனைவி கடத்தி வைக்கப்பட்டிருந்த அந்த 10 மணி நேரங்களில், கணவர் ‘எப்படியோ புரட்டி’ 45 ஆயிரம் ரிங்கிட்டை பிணைப் பணமாக கொடுத்திருக்கின்றார்.

இவ்வேளையில் அக்கடத்திலில் ஈடுபட்ட மற்றொருவர் ஆடவன் தப்பியோடியிருப்பதாகவும், அவனைக் காவல் துறை தீவிரமாக தேடி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

கைதான கும்பல், ஏற்கனவே குற்றச்செயல்களிலும் போதைப் பொருள் விவகாரத்திலும் சிக்கியிருப்பதும் அம்பலமாகியுள்ளது.

அக்கடத்தல் குற்றவியல் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்டு வரும் நிலையில், அது குறித்து தகவலறிந்த பொது மக்கள் செந்தூல் காவல் துறை நடவடிக்கை அறையையோ அல்லது அருகில் உள்ள காவல் நிலையங்களையோ தொடர்பு கொண்டு விசாரணைக்கு உதவ கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!