Latestமலேசியா

கழிவு மேலாண்மையை மேம்படுத்தி சுழற்சி பொருளாதாரத்தை வலுப்படுத்தும் – வீடமைப்பு மற்றும் உள்ளாட்சி அமைச்சு

கோலாலம்பூர், அக்டோபர் 5 – வீடமைப்பு மற்றும் உள்ளாட்சி அமைச்சர் ங்கா கோர் மிங் (Nga Kor Ming), “பயன்படுத்திவிட்டு தூக்கி எறியும்” முறையிலிருந்து சுழற்சி பொருளாதார முறைக்கு மலேசியா மாற வேண்டும் என்றும், இதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் தீவிரப்படுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.

மலேசியாவில் தினமும் சுமார் 40,000 டன் திடக்கழிவுகள் உருவாகுகின்றன. இதில் 40 விழுக்காடு வரை உணவுக் கழிவுகளாகும். எனவே, கழிவு உருவாக்கத்தைக் குறைத்தல், மீண்டும் பயன்படுத்துதல் மற்றும் மறுசுழற்சி செய்தல் அவசியம் என அவர் கூறினார்.

வீடமைப்பு மற்றும் உள்ளாட்சி அமைச்சின் 2025–2035 சுழற்சி பொருளாதாரத் திட்டத்தின் கீழ், நிலப்பரப்புகளில் சேரும் கழிவுகளை 2030ஆம் ஆண்டில் 48 விழுக்காடாகவும், 2035ஆம் ஆண்டில் 53 விழுக்காடாகவும் குறைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நாட்டின் மறுசுழற்சி விகிதமும் 2021ஆம் ஆண்டில் 31.52 விழுக்காட்டிலிருந்து 2024ஆம் ஆண்டில் 37.9 விழுக்காடாக உயர்ந்துள்ளது.

மேலும், EPR, தேசிய மறுசுழற்சி பிரச்சாரம் மற்றும் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கிற்கு எதிரான பிரச்சாரம் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆகஸ்ட் 2026 வரை, 6,256 மறுசுழற்சி வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் கழிவுகளை உருவாகும் இடத்திலேயே பிரித்து, மறுசுழற்சி செய்யும் பழக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் ங்கா கோர் மிங் வலியுறுத்தினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!