Latestமலேசியா

வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் மலேசியர்களுக்கு அரசு உதவும்; ஆனால் முழு செலவுகளையும் ஏற்காது – வெளியுறவு அமைச்சு

கோலாலம்பூர், அக்-05–பயணக் காப்பீடு இல்லாதவர்கள் உட்பட வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் மலேசியர்களுக்கு, அரசாங்கம் தொடர்ந்து தூதரக உதவிகளை வழங்கும். எனினும், அவர்களைத் தாயகம் அழைத்து வருவதற்கான முழு நிதிச் செலவையும் அரசாங்கம் ஏற்காது என வெளியுறவு அமைச்சர் Datuk Seri Mohamad Hasan தெரிவித்திருக்கிறார்.

தேவைப்படும் மலேசியர்களுக்கு நெருங்கிய குடும்பத்தினரைத் தொடர்பு கொள்ள உதவுவது உள்ளிட்ட தூதரக ரீதியிலான உதவிகள் சூழ்நிலைக்கு ஏற்ப வழங்கப்பட்டு வருகின்றன. சில நேரங்களில், அவர்களுக்கு ஆதரவளிக்க நிதி திரட்டும் முயற்சிகளிலும் அமைச்சு உதவியுள்ளது. ஹஜ் மற்றும் உம்ரா பயண ஏற்பாடுகளைச் செய்யும் முகவர்களால் ஏமாற்றப்பட்டு Jeddah அல்லது Madinahவில் சிக்கித் தவிக்கும் மலேசியர்களுக்கு உதவுவதும் அதில் அடங்கும் என அவர் கூறினார்.

இத்தகைய சம்பவங்கள் அரசாங்கத்துக்கு பெரும் நிதிச் சுமையை ஏற்படுத்துவது உண்மைதான். என்றாலும் பல்வேறு தரப்பினரின் ஒத்துழைப்புடன் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி வழங்கப்பட்டு வருவதை அமைச்சர் சுட்டிக் காட்டினார்.

இதனிடையே, வெளிநாடுகளுக்குச் செல்பவர்கள் அல்லது அங்கு வசிப்பவர்கள் அவசர காலங்களில் தங்களைக் கண்டறிந்து உதவுவதற்காக ‘e-Konsular’ இணையதளத்தில் தங்களைப் பதிவு செய்யுமாறு Mohamad Hasan கேட்டுக் கொண்டார். நிலநடுக்கம், சூறாவளி அல்லது மோதல்கள் போன்ற நெருக்கடிகளின்போது அது அமைச்சுக்கும் மலேசியத் தூதரகங்களுக்கும் பேருதவியாக இருக்கும்.

அதோடு, அவசர காலங்களில் மலேசியர்களுக்கு முக்கியத் தகவல்கள் மற்றும் எச்சரிக்கைகளை விரைவாக வழங்க ‘MyWorldAlert’ செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். GPS அடிப்படையிலான வசதியைக் கொண்ட அச்செயலி மூலம் வெளிநாடுகளில் உள்ள மலேசியர்கள் அருகிலுள்ள மலேசியத் தூதரகங்களுடன் எளிதாகத் தொடர்பு கொள்ள முடியும்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!