
புத்ராஜெயா, அக்-05-அரசாங்கத்திற்குச் செலுத்த வேண்டிய 314 மில்லியன் ரிங்கிட் வருவாய் நிலுவையில் இருப்பதைத் தொடர்ந்து, சாலைப் போக்குவரத்துத் துறையான JPJவின் கட்டண வசூல் முகவர்களாகச் செயல்பட்டு வந்த My E.G. Sdn Bhd மற்றும் Zetrix AI Bhd ஆகியவற்றின் சேவைகள் இன்று முதல் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
அந்த நிலுவைத் தொகை இவ்வாண்டு மே 19 முதல் செப்டம்பர் 30 வரையிலானவை என போக்குவரத்து அமைச்சர் Anthony Loke தெரிவித்தார். அத்தொகை கடந்த மூன்று ஆண்டுகளாக நிலுவையில் இருந்தவை அல்ல. எனவே அமைச்சும் JPJ-வும் கடந்த மூன்றாண்டுகளாக நடவடிக்கை எடுக்கத் தவறி விட்டதாகக் கூறப்படுவதை அவர் மறுத்தார்.
மே மாதம் முதல் நான்கு ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி, காலக்கெடு நிர்ணயித்து, 35 நினைவூட்டல் அறிவிக்கைகளை போக்குவரத்து அமைச்சும் JPJவும் அனுப்பின. நிலுவைத் தொகைக்காக 231 மில்லியன் ரிங்கிட் காசோலை வழங்கப்பட்டபோதும், செப்டம்பர் 30ஆம் தேதி வங்கி அடுத்த கட்ட நடவடிக்கையைச் செயல்படுத்தாததைத் தொடர்ந்து சேவைகளை நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டதாக Anthony Loke விளக்கினார்.
எனினும், அதனால் JPJ சேவைகள் பாதிக்கப்படாது. MyJPJ செயலி, JPJ இணையதளம், நேரடி முகப்புகள் மற்றும் கியோஸ்க்குகள் உள்ளிட்ட மாற்று வழிகளில் பொதுமக்கள் தொடர்ந்து சேவைகளைப் பெறலாம்.
இவ்வேளையில் 314 மில்லியன் ரிங்கிட் தொகையை மீட்க, அமைச்சு JPJ-யும் சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக Anthony Loke தெரிவித்தார். ஒப்பந்த விதிமுறைகளை மீறியதைத் தொடர்ந்து, இரு நிறுவனங்களின் சேவைகளும் இன்று அதிகாலை 12.01 மணி முதல் நிறுத்தப்பட்டதாக JPJ முன்னதாக அறிவித்திருந்தது.



