
அலோர் ஸ்டார், ஏப்ரல்-7-கெடா, Pantai Merdeka கடலில் ஏற்பட்ட காயாக் படகு விபத்தில் 2 பயிற்சி ஆசிரியர்கள் உயிரிழந்த துயரச் சம்பவத்திற்கு, கல்வி அமைச்சு முழுப்பொறுப்பை ஏற்றுள்ளது.
பெர்லிஸ் ஆசியர் பயிற்சிக் கழகத்தின் பயிற்சி ஆசிரியர்களான 20 வயது Christopher Ling Jia Siang, 21 வயது Joey Ling Lin Siang இருவரும் அதில் உயிரிழந்தனர்.
இச்சம்பவம் வெளிப்புற பயிற்சி நடவடிக்கையின் போது ஏற்பட்ட நிலையில், பாதுகாப்பு நடைமுறைகள் குறித்தும் கேள்விகளை எழுப்பியுள்ளது.
எது எப்படி இருப்பினும், துயரத்திற்கு அமைச்சு முழுப்பொறுப்பேற்றுக் கொள்வதாகவும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டுமென்றும், அமைச்சர் ஃபாட்லீனா சிடேக் கூறினார்.
அவர் முன்னதாக, அலோர் ஸ்டார் சுல்தானா பஹியா மருத்துவமனையில் இறந்தவர்களுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபமும் தெரிவித்த ஃபாட்லீனா, இச்சம்பவத்தில் SOP பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்பட்டதா என்பதை உறுதிப்படுத்த விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன என்றார்.
தொடக்கக் கட்டமாக, அந்தக் காயாக் படகோட்டத்திற்கு ஏற்பாடு செய்த அதிகாரிகள், விசாரணை முடியும் வரை தற்காலிகமாக பெர்லிஸ் கல்வி இலாகாவுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
அனைத்து கல்வி நிறுவனங்களிலும் நடைபெறும் வெளிப்புற நடவடிக்கைகளுக்கான SOP நடைமுறைகள் மறுஆய்வு செய்யப்பட்டு, பாதுகாப்பு நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்தப்படும் என்றும் அவர் சொன்னார்.



