
கோலாலம்பூர், மார்ச் 23 – காய்கறிகளின் விலை விரைவில் கட்டம் கட்டமாக 50 விழுக்காடு அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உற்பத்தி செலவினம் உயர்ந்ததால் இந்த விலையேற்றம் இருக்கும் என கேமரன் மலை மலாய் சமூகத்தின் காய்கறிகள் பயிரிடுவோர் சங்கத்தின் தலைவர் டத்தோ சைட் அப்துல் ரஹ்மான் சைட் அப்துல் ரஷிட் தெரிவித்தார்.
இன்னும் இரண்டொரு மாதத்தில் மூலப் பொருட்களின் விலை அதிகரிக்கக்கூடும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். 50 விழுக்காடு விலை உயர்ந்த பின்னர் அது 30 விழுக்காடுவரை குறையும் சாத்தியம் இருப்பதாகவும் அவர் கூறினார்.
உற்பத்திச் செலவுகள் வேகமாக அதிகரித்த போதிலும், இதுவரை காய்கறி விலைகளில் எந்த உயர்வும் ஏற்படவில்லை.உரத்தின் விலை உயர்வு, இயந்திரங்கள், ஜெனரேட்டர் மற்றும் போக்குவரத்து செயல்பாடுகளுக்குத் தேவைப்படும் டீசல் விலை உயர்வு போன்றவை உற்பத்திச் செலவுகள் அதிகரிப்பதற்கான காரணங்களாகும் என சைட் அப்துல் ரஹ்மான் கூறினார்.
வீட்டுச் செலவுகளைக் குறைப்பதற்காக, கீரை, மற்றும் கடுகு போன்ற பயிர்களுக்கு மண் இல்லாத ஹைட்ரோபோனிக் நுட்பங்களைப் பயன்படுத்துவது உட்பட, மக்கள் தங்கள் சொந்தப் பயன்பாட்டிற்காக வீட்டுப் பகுதிகளில் சிறிய அளவில் பயிர்களைப் பயிரிடுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று இஸ்லாமிய பயனீட்டாளர் சங்கத்தின் தலைவர் டத்தோ நஜிம் ஜோஹான் தெரிவித்தார்.
மேலும், மலிவான அல்லது கட்டுப்படியான விலையில் பொருட்களைப் பெறுவதற்கு, விலைகளை ஒப்பிட்டு பயனீட்டாளர்கள் புத்திசாலித்தனமாகத் காய்கறிகளை தேர்வு செய்ய வேண்டும்.
பொருட்களின் விலையை பயனீட்டாளர்கள் மட்டுமே தீர்மானிக்க முடியும். அவர்கள் ஒரு நியாயமான விலையைத் தேர்ந்தெடுப்பதில் புத்திசாலித்தனமாக இருந்தால், வியாபாரிகளுக்கு விலைகளைக் குறைப்பதைத் தவிர வேறு வழியில்லை என ஜோஹான் சுட்டிக்காட்டினார்.



