
கோலாலம்பூர், டிசம்பர் 30 – கோலாலம்பூர் போக்குவரத்து விசாரணை மற்றும் அமலாக்கத் துறை JSPT வழங்கிய 70 விழுக்காடு சம்மன் தள்ளுபடி சலுகை, நவம்பர் 1 முதல் நேற்று வரை சிறப்பான வரவேற்பைப் பெற்று, மொத்தம் 104,900 சம்மன்கள் செலுத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் சுமார் 7.2 மில்லியன் ரிங்கிட் வசூலிக்கப்பட்டதாக அத்துறையின் தலைவர் Asisten Komisioner Mohd Zamzuri Mohd Isa தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், தொடக்கத்தில் மக்கள் வரவு மிதமாக இருந்தாலும், சலுகையின் இறுதி நாட்களான இந்த இரு நாட்களில் மட்டும் சுமார் 5,500 பேர் சம்மன் செலுத்த வந்துள்ளனர்.
இந்நிலையில் மக்கள் வசதிக்காக கோலாலம்பூர் முழுவதும் கூடாரங்கள் மற்றும் கூடுதல் கட்டண கவுண்டர்கள் திறக்கப்பட்டு, சேவை விரைவாக நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டன. JSPT கோலாலம்பூரில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பயன்பெற தனியான கவுண்டர்களும் செயல்பட்டன.
பொதுமக்கள் இன்னும் நிலுவையில் இருக்கும் சம்மன்களை முடிந்தவரை விரைவில் செலுத்தி, எதிர்கால போக்குவரத்து விதிமுறைகளைப் பின்பற்றி பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் எனவும் Zamzuri கேட்டுக்கொண்டார்.



