Latestமலேசியா

கூச்சிங்கில் ஆசிரியை மீது தாக்குதல்; சம்பவத்தை நேரலையில் ஒளிபரப்பிய 16 வயது மாணவர்

கூச்சிங், அக்டோபர்-22,சரவாக், கூச்சிங்கில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில், 16 வயது மாணவர் ஆசிரியையைத் தாக்கிய சம்பவம், சமூக வலைத்தளத்தில் நேரலையாக ஒளிபரப்பப்பட்டது தெரியவந்துள்ளது.

நேற்று காலை சுமார் 7.50 மணியளவில், துங்கு புத்ரா-HELP அனைத்துலகப் பள்ளியில் நிகழ்ந்த இச்சம்பவத்தில், ஆசிரியையின் கையில் காயங்கள் ஏற்பட்டன.

கோடரி மற்றும் பட்டாசுகளை ஆயுதமாகக் கொண்டு வந்து மாணவர் தாக்குதல் நடத்திய காட்சிகள், அவரது பார்வைக் கோணத்தில் 12 நிமிடங்கள் 6 வினாடிகள் நேரலையாகப் பதிவாகியுள்ளதாக, சரவாக் மாநில இடைக்காலப் போலீஸ் ஆணையர் Saifullizan Ishak  தெரிவித்தார்.

அந்த வீடியோவை மலேசியத் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம், MCMC சமூக வலைத்தளத்திலிருந்து நீக்கியுள்ளது.

சம்பவம் தொடர்பில் கைதுச் செய்யப்பட்ட மாணவர், பின்னர் போலீஸ் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

இதனிடையே, மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்ற ஆசிரியை தற்போது நலமுடன் இருப்பதாகவும், அவருக்குக் கடுமையான காயங்கள் ஏற்படவில்லை என்றும் பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சம்பவத்தைத் தொடர்ந்து பள்ளியில் பாதுகாப்பு நடவடிக்கைகள் கடுமையாக்கப்பட்டுள்ளதுடன், மூன்று துணைப் போலீஸ் அதிகாரிகளும் பணியில் அமர்த்தப்படவுள்ளனர்.

ஆபத்தான ஆயுதத்தால் காயம் விளைவித்தது மற்றும் வெடிபொருள் சட்டத்தின் கீழ் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!