Latestமலேசியா

கைதிகளுக்கான முதல் அங்கீகரிக்கப்பட்ட BLS பயிற்சி: பத்து காஜா சீர்திருத்த மையத்திற்கு மலேசிய சாதனை புத்தக அங்கீகாரம்

பத்து காஜா, ஜூன் 25 – நாட்டிலேயே முதன்முறையாக கைதிகளுக்கான அங்கீகரிக்கப்பட்ட அடிப்படை உயிர்காக்கும் ஆதரவு பயிற்சியை நடத்தியதற்காக பத்து காஜா சீர்திருத்த மையம் மலேசிய சாதனை புத்தகத்தின் அங்கீகாரம் பெற்றது.

பத்து காஜா மருத்துவமனையுடன் இணைந்து நடத்தப்பட்ட இப்பயிற்சியில் 12 ஆண்கள், 30 பெண்கள் என மொத்தம் 42 கைதிகள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பங்கேற்றனர்.

மருத்துவ நிபுணர்களின் நேரடி வழிக்காட்டுதலோடு நடத்தப்பட்ட இந்த பயிற்சியில் கலந்துகொண்ட கைதிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டதால் அவர்களது விடுதலைக்குப் பிறகு வேலை வாய்ப்பை பெறுவதற்கு உதவும் என்று பேரா மாநில சிறைத்துறையின் இயக்குநர் துணை கமிஷனர் பைரூஸ் அகமட் தெரிவித்தார்.

பத்து காஜா சீர்திருத்த மையத்தில் நேற்று நடைபெற்ற இந்த பயிற்சியில் பத்து காஜா மருத்துவமனை இயக்குநர் டாக்டர் ஜெ. ஜெயகுமரன் கலந்து கொண்டு உரையாற்றியபோது, இதில் கலந்துகொண்ட அனைத்து பங்கேற்பாளர்களும் முழுமையாக தேர்சி பெற்று அடிப்படை உயிர்காக்கும் பயிற்சியாளர்களாக அங்கீகரிக்கப்பட்டதோடு அவர்களுக்கு கூடுதல் மதிப்பு சேர்க்கும் வகையில் இப்பயிற்சி அமைந்ததாக சுட்டிக்காட்டினார்.

சிறைச்சாலைக்குள் யாருக்காவது உடல்நலக் குறைவு அல்லது அவசரநிலை ஏற்பட்டால், அருகில் இருக்கும் கைதிகளே முதலில் உதவி செய்யக்கூடியவர்களாக உருவாக வேண்டும் என்ற நோக்கத்திலேயே கைதிகளுக்கு இந்த பயிற்சி வழங்கப்பட்டதாக பத்துகாஜா சீர்திருத்த மைய இயக்குனர் எஸ். தனபால் கூறினார்.

பயிற்சியில் கலந்து கொண்ட அனைத்து பங்கேற்பாளர்களுக்கும் மலேசிய சாதனை புத்தக அதிகாரி சித்தி ஹஜார் ஜோகோர் சான்றிதழ் வழங்கி சிறப்பித்தார்.

இந்த பயிற்சி தங்களுக்கு மட்டுமின்றி அவசர வேளையில் மற்றவர்களுக்கு உதவி புரிவதற்கான வாய்ப்பை வழங்கியிருப்பதாக இதில் கலந்துகொண்ட சில கைதிகள் தெரிவித்தனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!