கோம்பாக், ஜூன்-11, சிலாங்கூர் கோம்பாக்கில் சமயப் பள்ளியொன்றில் ஏற்பட்ட நச்சுணவுப் பாதிப்பால் இருவர் உயிரிழந்தது தொடர்பில், உணவு கேட்டரிங் நிறுவனம், ஆசிரியர்கள் மற்றும் நிகழ்ச்சி ஏற்பாளர்களை போலீஸ் விசாரணைக்கு அழைக்கவிருக்கிறது.
எத்தனைப் பேர் அழைக்கப்படுவார்கள் என்பது விசாரணையைப் பொருத்தது; ஆனால் சம்பந்தப்பட்ட அனைவரும் நிச்சயமாக விசாரிக்கப்படுவர் என சிலாங்கூர் போலீஸ் தலைவர் டத்தோ ஹுசேய்ன் ஓமார் கான் ( Datuk Hussein Omar Khan) கூறினார்.
Sungai Chinchin Integrasi ஆரம்ப சமயப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் காலை பசியாறையாக வழங்கப்பட்ட பீ ஹுன் மற்றும் பொரித்த முட்டையைச் சாப்பிட்டதே அந்நச்சுணவுப் பாதிப்புக்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.
நிகழ்வில் பங்கேற்ற 247 பேரில் 82 பேருக்கு நச்சுணவுப் பாதிப்புக்கான உபாதைகள் இருந்திருக்கின்றன.
இதையடுத்து அப்பள்ளியின் சிற்றுண்டிச்சாலையை உடனடியாக மூடுமாறு சுகாதார அமைச்சு உத்தரவிட்டிருப்பதாகவும் அவர் சொன்னார்.
அச்சம்பவத்தில் மரணமடைந்தவர்கள் 17 வயது மாணவன் மற்றும் 2 வயது பெண் குழந்தை என உறுதிச் செய்யப்பட்டுள்ளது.
பள்ளியில் பாதுகாவலராகப் பணிபுரியும் தந்தை வீட்டுக்குக் கொண்டு வந்த உணவைச் சாப்பிட்டதில் அக்குழந்தை உயிரிழந்திருக்கிறது.