
கோலாலம்பூர், ஜூலை-12 – கோலாலம்பூரின் பல்வேறு இடங்களில் குடிநுழைவுத் துறை மேற்கொண்ட சோதனைகளில், மொத்தமாக 89 வெளிநாட்டவர்களும் 4 உள்ளூர் ஆடவர்களும் கைதாகியுள்ளனர்.
கூச்சாய், ஸ்ரீ பெட்டாலிங், செராஸ் உள்ளிட்ட இடங்களில் ஜூலை 9-ஆம் தேதி அச்சோதனைகள் நடத்தப்பட்டன.
2 விபச்சார விடுதிகளில் 26 வெளிநாட்டுப் பெண்கள் சிக்கினர்; அவர்களில் 6 பேர் தாய்லாந்து நாட்டவர்கள், 11 பேர் இந்தோனேசியர்கள், ஒருவர் மியன்மார் பிரஜை ஆவார்.
தலா ஒரு வங்காளதேசியும் பாகிஸ்தானிய ஆடவரும் கைதானதோடு, விபச்சார விடுதிகளின் பாதுகாவலர்கள் என நம்பப்படும் 4 மலேசிய ஆண்களும் அதில் கைதுச் செய்யப்பட்டனர்.
ஹோட்டல் முகப்புகளின் பின்னால் தாய்லாந்து, வியட்நாம், மியன்மார் மற்றும் இந்தோனேசிய விலைமாதர்கள் 160 ரிங்கிட் முதல் 480 ரிங்கிட் வரையிலான கட்டணத்தில் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகின்றனர்.
‘அச்சேவை’ இணையம் வாயிலாக விளம்பரப்படுத்தப்பட்டு, வாட்சப், டெலிகிராமில் முன்பதிவு நடைபெறுகிறது.
இவ்வேளையில், அதே இரவு GRO சேவைகளை வழங்கும் கேளிக்கை மையங்கள் சோதனையிடப்பட்டன.
அதில் 61 வெளிநாட்டுப் பெண்கள் சிக்கினர்; அவர்களில் 44 பேர் தாய்லாந்து பிரஜைகள், இருவர் வியட்நாமியப் பெண்கள், 4 லாவோஸ் நாட்டவர்கள், 2 பேர் மியன்மார் பெண்கள் ஆவர்.
அம்மையத்தில் வேலை செய்து வந்த 5 வங்காளதேசிகள், 4 தாய்லாந்து பிரஜைகள் என 9 ஆடவர்களும் கைதுச் செய்யப்பட்டனர்.
கைதான அனைவரும் மேல் நடவடிக்கைக்காக புத்ராஜெயா குடிநுழைவுத் தடுப்பு முகாமுக்குக் கொண்டுச் செல்லப்பட்டனர்.