Latestமலேசியா

சக மாணவரை கும்பலாகத் தாக்கிய 12 UMT மாணவர்கள் கைது

குவாலா திரங்கானு, டிசம்பர்-19, UMT எனப்படும் மலேசியத் திரங்கானு பல்கலைக்கழக மாணவர் தங்கும் விடுதியில், ஆண் மாணவரை கும்பலாகத் தாக்கியதன் பேரில் 12 மாணவர்கள் கைதாகியுள்ளனர்.

பாதிக்கப்பட்டவரின் தந்தை போலீசில் புகார் செய்ததை அடுத்து, 20 முதல் 22 வயதிலான அவர்கள் அனைவரும் செவ்வாய்க்கிழமை மாலை கைதுச் செய்யப்பட்டனர்.

டிசம்பர் 15-ஆம் தேதி அதிகாலை 1 மணிக்கும் 5 மணிக்கும் இடையில் அச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.

கூர்மையற்ற ஆயுதங்களால் தாக்கப்பட்டதில், கை, கால்கள், நெஞ்சு, வயிறு என அம்மாணவரது உடலில் பல இடங்கள் வீக்கம் அடைந்தும், உள்காயங்கள் ஏற்பட்டுள்ளதும் கண்டறியப்பட்டது.

தகவல் கிடைத்து பதறிப் போய் மலாக்காவிலிருந்து விரைந்த 20 வயது அம்மாணவரின் குடும்பம், அவரை உடனடியாக சுல்தானா நூர் சஹிரா மருத்துவமனையில் சேர்த்தது.

தாக்கப் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

கைதானவர்களை 4 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க போலீஸ் நீதிமன்ற ஆணையைப் பெற்றுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!