கோலாலம்பூர், ஜூன் 5 – கைது செய்யப்பட்ட சந்தேகப் பேர்வழிக்கு சொந்தமான 20,000 ரிங்கிட்டை பெட்டாலிங் ஜெயா போதைப் பொருள் குற்றவியல் விசாரணைப் பிரிவின் உறுப்பினர் எடுத்துக் கொண்டதாக கிடைக்கப்பெற்ற புகார் தொடர்ந்பில் விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ உசேய்ன் ஒமான் கான் ( Hussein Omar Khan ) தெரிவித்திருக்கிறார். தனது மகனுக்கு சொந்தமான அந்த பணத்தை அவனை தடுத்து வைத்த போலீஸ்காரர் எடுத்துக்கொண்டுள்ளதாக 50 வயது ஆடவர் புகார் செய்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதோடு தடுத்துவைக்கப்பட்டிருந்தபோது அந்த சந்தேக நபரை போலீஸ்காரர் தாக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு குறித்தும் விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக உசேய்ன் கூறினார். 20 வயதுடைய அந்த சந்தேகப் பேர்வழி கடந்த மாதம் 17 ஆம் தேதி 1952 ஆம் ஆண்டின் அபாயகரமான போதைப் பொருள் சட்டத்தின் 39B பிரிவின் கீழ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டார் .