கோலாலம்பூர், ஜூலை-18, சமூக ஊடக நேரலைகளின் (live session) போது பதிவேற்றப்படும் கருத்துகள் காணாமல் போய்விடுமென யாரும் எண்ண வேண்டாம்.
என்ன வேண்டுமென்றாலும் பதிவிடலாம்; நேரலை முடிந்தவுடன் அது காணாமல் போய்விடும், நாமும் தப்பித்துக் கொள்ளலாம் என பலர் எண்ணிக் கொண்டிருக்கின்றனர்.
ஆனால், இனியும் அப்படி முடியாதென தொடர்புத் துறை அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சில் எச்சரித்துள்ளார்.
Facebook, Tik Tok, Instagram போன்ற சமூக ஊடகங்களில் நேரலைகளில் வைக்கப்படும் கருத்துகளைக் கண்காணிக்க, மலேசியத் தொடர்பு-பல்லூடக ஆணையம் (MCMC) மற்றும் போலீஸ் வாயிலாக சமூக ஊடகங்களின் ஒத்துழைப்பு நாடப்பட்டிருப்பதாக அவர் சொன்னார்.
இவ்வேளையில், இணையப் பகடிவதை குறித்து அண்மைய காலமாக அதிகம் பேச்சப்பட்டாலும், உண்மையில் சமூக ஊடகங்களில் பல்வேறு பிரச்னைகளைத் தீர்க்க வேண்டியிருக்கின்றது.
மோசடிகளாலும் மக்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்; ஆகவே இது போன்ற எல்லா பிரச்னைகளுக்கும் தீர்வு காண பேசப்பட்டு வருவதாக ஃபாஹ்மி சொன்னார்.
அதே சமயம், 13 வயதுக்கும் கீழ்பட்ட பிள்ளைகளைச் சந்திக்கும் போது, அவர்கள் சமூக ஊடகக் கணக்குகளைத் திறக்கக் கூடாது என்பதை வலியுறுத்தியுமாறு நாடாளுமன்ற உறுப்பினர்களையும் அமைச்சர் கேட்டுக் கொண்டார்.
13 வயதுக்குக் கீழ்பட்டவர்கள் சமூக ஊடகக் கணக்கு வைத்திருக்கக் கூடாது என அனைத்து சமூக ஊடகங்களும் விதிமுறைகளைக் கொண்டிருந்தாலும், கணக்குகள் திறக்கப்படும் போது முறையாகச் சரிபார்க்கப்படுவதில்லை (verification) என ஃபாஹ்மி சுட்டிக் காட்டினார்.
இணையச் சேவை, வேகமானதாகவும், பரவலானதாகவும், மலிவானதாகவும் இருப்பது மட்டுமல்ல, சிறார்களுக்கும் குடும்பங்களுக்கும் பாதுகாப்பாக இருப்பதை உறுதிச் செய்ய வேண்டியது நம் அனைவரது கடமையென்றார் அவர்.