சிரம்பான், நவம்பர்-28, தேடப்பட்டு வந்த முக்கியக் குற்றவாளி ஒருவன், சிரம்பான் 2, பெர்சியாரான் S2/1 சாலையில் நேற்றிரவு போலீசுடன் நடந்த துப்பாக்கிச் சூட்டில் சுட்டுக் கொல்லப்பட்டான்.
இரவு 10.30 மணிக்கு புக்கிட் அமான் குற்றப்புலனாய்வுத் துறையைச் சேர்ந்த போலீஸ் அப்பகுதியில் குற்றச் செயல் துடைத்தொழிப்புக்காக ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, கருப்பு நிற Mercedes கார் சந்தேகத்திற்குரிய வகையில் இருந்ததை கண்டது.
சோதனைக்காக அதை நிறுத்த முயன்ற போது, காரிலிருந்த ஆடவன் போலீஸ் வாகனத்துடன் மோதினான்.
திடீரென போலீசை நோக்கி அவன் துப்பாக்கிச் சூட்டை கிளப்பியதால் நிலவரம் பதற்றமானது.
தற்காத்துக் கொள்வதற்காக போலீசும் பதிலுக்குச் சுட்டதில், 38 வயது அந்த உள்ளூர் ஆடவன் காருக்குள்ளேயே கொல்லப்பட்டான்.
அவனது காரிலிருந்து, ஒரு கைத்துப்பாக்கியும் 2 உயிருள்ள தோட்டாக்களும் கண்டெடுக்கப்பட்டன.
அவனுக்கு போதைப்பொருள் உட்பட ஏற்கனவே 9 குற்றப்பதிவுகள் இருப்பதும் கண்டறியப்பட்டது.
அவ்வாடவன், பினாங்கில் ஒரு குற்றச்செயல் தொடர்பில் தீவிரமாகத் தேடப்பட்டு வந்தவன் என்றும் தெரிய வந்துள்ளது.
இவ்வேளையில், போலீஸ் வாகனத்தை அவன் மோதியதில், போலீஸ்காரர் ஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவரின் உடல்நிலை சீராக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.