Latestமலேசியா

சிலாங்கூர் சுல்தான்: ஷாரியா சட்ட விவகாரத்தில் கூட்டரசு நீதிமன்றத்தின் தீர்ப்பை மதிப்பீர்!

கோலாலம்பூர், பிப்ரவரி 15 – இஸ்லாமிய ஷாரியா சட்டம் தொடர்பில் அண்மையில் கூட்டரசு நீதிமன்றம் அளித்த முக்கியத் தீர்ப்பை அனைத்துத் தரப்பினரும் மதிக்க வேண்டும் என மேன்மைத் தங்கிய சிலாங்கூர் சுல்தான் கேட்டுக் கொண்டுள்ளார்.

கூட்டரசு அரசியலமைப்புச் சட்டத்தின் மாண்பை நிலைநிறுத்தும் வகையில் அத்தீர்ப்பு அமைந்துள்ளதாக மலேசிய இஸ்லாமிய சமய விவகாரங்களுக்கான தேசிய மன்றத்தின் தலைவருமான சுல்தான், சுல்தான் ஷராஃபுடின் இட்ரிஸ் ஷா தெரிவித்துள்ளார்.

சட்ட முரண் நிலவும் போது, ஆழமான ஆய்வுகளுடன் அதற்கு உரிய தீர்வுக் காணப்பட வேண்டும் என்பதே முக்கியம் என அவர் குறிப்பிட்டார்.

கூட்டரசு அரசியலமைப்புச் சட்டத்தை மீறுவதாக் கூறி கிளந்தான் மாநில ஷாரியா சட்டத்தின் 18 விதிகளில் 16 விதிகளை புத்ராஜெயா கூட்டரசு நீதிமன்றம் கடந்த வெள்ளிக் கிழமை ரத்துச் செய்த விவகாரம் குறித்து சிலாங்கூர் சுல்தான் கருத்துரைத்தார்.

செல்லாது என அறிவிக்கப்பட்ட 16 விதிகளில் வழிபாட்டுத் தலங்களை அழிப்பது, ஓரினப் புணர்ச்சி, பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்டவையும் அடங்கும். நாட்டின் உச்ச நீதிமன்றத்தின் அத்தீர்ப்புக்கு பலவாறான கருத்துகள் வருவது ஒரு பக்கம் இருக்க, சிலர் சொந்த வியாக்கியானங்களை முன் வைத்து குழப்பியும் வருகின்றனர். தீர்ப்பு வந்த தினத்தை ‘கருப்பு வெள்ளி’ என சற்று மிகைப்படுத்தி அறிக்கை வெளியிட்டோரையும் சுல்தான் சுட்டிக் காட்டினார்.

மாநில ஷாரியா சட்ட விதிகளை இயற்றும் அதிகாரம், சட்டமன்றங்களுக்கு இருப்பதை கூட்டரசு அரசமைப்புச் சட்டம், தெளிவாக வரையறுக்க வேண்டும்; அதற்கு கூட்டரசு அரசியலமைப்புச் சட்டத்தில் உரிய திருத்தம் செய்யப் பட வேண்டிய அவசியம் குறித்து ஆராய வேண்டும் என சுல்தான் ஷராஃபுடின் பரிந்துரைத்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!