Latestமலேசியா

சிலாங்கூர் FC-யின் தண்டனையைக் குறைத்த MFL-லைக் கண்டித்து ‘வெளுத்து வாங்கிய’ TMJ

ஜொகூர் பாரு, ஜூன்-28, சிலாங்கூர் FC அணிக்கு விதிக்கப்பட்ட தண்டனையைக் குறைத்துள்ள மலேசியக் கால்பந்து லீக்கின் (MFL) நடவடிக்கையை ஜொகூர் பட்டத்து இளவரசர் துங்கு இஸ்மாயில் சுல்தான் இப்ராஹிம் (TMJ) சாடியுள்ளார்.

அதுவும் மேல்முறையீடு எதுவும் செய்யப்படாமலேயே தண்டனைக் குறைக்கப்பட்டது வினோதத்திலும் வினோதம் என Johor Southern Tigers facebook பக்கத்தில் அவர் சற்றே நகைப்புடன் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

இது ஒரு தவறான முன்னுதாரணமாக அமைந்து விடும்; இனி மற்ற அணிகளும் தாங்கள் தவறிழைத்து தண்டனைப் பெறும் போதெல்லாம் சிலாங்கூர் FC-யின் ‘யுக்தி’யைப் பயன்படுத்தலாம் என ஜொகூரின் இடைக்கால சுல்தானுமான அவர் சொன்னார்.

ஆட்டக்காரர்களுக்குச் சம்பள பாக்கி வைத்துள்ள அணிகள், ஆட்டங்களில் இருந்து கடைசி நேரத்தில் விலகிக் கொள்ளும் அணிகள், விதிமுறைகளை மீறும் அணிகள் என எல்லாருக்கும் இனி கொண்டாட்டம் தான்.

தத்தம் மாநில சுல்தான்களைச் சினத்துடன் கடிதம் எழுத வைத்து விட்டால், தண்டனையெல்லாம் இனி பறந்துப் போகுமென TMJ நக்கல் கலந்த தோரணையில் கூறினார்.

கடந்த மாதம் JDT அணிக்கெதிரான Sumbangsih கிண்ண ஆட்டத்திலிருந்து சிலாங்கூர் FC விலகிக் கொண்டதால் அதற்கு MFL விதித்த தண்டனை மனிதாபிமானமற்றது மற்றும் எல்லைமீறிய ஒன்றெனக் கூறி சிலாங்கூர் FC-யின் புரவலருமான சுல்தான் ஷாராஃபுடின் இட்ரிஸ் ஷா முன்னதாக கடும் சினத்துடன் அறிக்கை வெளியிட்டார்.

இதையடுத்து, தண்டணைகள் குறைக்கப்படுவதாக MFL நேற்று மாலை அறிவித்தது.

அதாவது, 1 லட்சம் ரிங்கிட் அபராதம் 60 ஆயிரம் ரிங்கிட்டாகக் குறைக்கப்பட்டது; 3 புள்ளிகள் குறைக்கப்பட்ட முடிவு மீட்டுக் கொள்ளப்பட்டது; அதோடு, JDT-க்கு எதிராக அடுத்து வரும் சூப்பர் லீக் ஆட்டத்தைக் ரசிகர்கள் இல்லாமல் நடத்த வேண்டும் என்ற முடிவும் இரத்துச் செய்யப்பட்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!