
கோலாலம்பூர், ஏப்ரல்-16-ஆங்காங்கே சில பெட்ரோல் நிலையங்களில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், நாடு முழுவதும் எரிபொருளுக்கு பற்றாக்குறை நிலவுவதாக அர்த்தமில்லை.
பொருளாதார அமைச்சர் Akmal Nasrullah Nasir அதனைத் தெளிவுப்படுத்தியுள்ளார்.
அந்ந ஒரு சில பெட்ரோல் நிலையங்களில் ஏற்பட்ட சிக்கல்களுக்குக் கூட உள்ளூர் மட்டத்தில் ஏற்பட்ட விநியோகத் தடைகளே காரணம் என்றார் அவர்.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் விநியோகத்தை சீர்செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மற்றபடி, நாட்டில் பொதுவாக எரிபொருள் விநியோகம் நிலையானதாகவும் போதுமானதாகவும் இருப்பதாக அவர் உத்தரவாதம் அளித்தார்.
சில இடங்களில் வாகனமோட்டிகள் எரிபொருள் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டதாக கூறிய நிலையில், பொது மக்களிடையே கவலை அதிகரித்துள்ளது குறித்து அமைச்சர் கருத்துரைத்தார்.
நாடு முழுவதும் எரிபொருள் விநியோகம் குறைந்தபட்சம் ஜூன் மாத இறுதி வரை பாதுகாப்பாக இருப்பதாக பெட்ரோனாஸ் உறுதிப்படுத்தியுள்ளதையும் Akmal சுட்டிக் காட்டினார்.
எனவே, அதிகமாக எரிபொருளை வாங்கி சேமிக்க முயற்சிக்க வேண்டாம் என்றும், தேவையற்ற பதற்றத்தை ஏற்படுத்த வேண்டாம் என்றும் அமைச்சர் பொது மக்களை அறிவுறுத்தினார்.



