
பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல்-16-பண்டார் சன்வேயில் உள்ள சலவைக் கடையில் பூனைக்குட்டி ஒன்று கொல்லப்பட்டதாக பரவி வரும் வீடியோவை அடிப்படையாகக் கொண்டு, போலீஸார் ஒரு பெண்ணைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
நேற்று சன்வே மெந்தாரியில் உள்ள ஒரு வளாகத்தில் இச்சம்பவம் நடந்துள்ளது.
மனநலம் பாதிக்கப்பட்டதாக நம்பப்படும் ஒரு பெண் அங்கு இரகளையில் ஈடுபடுவதாக முன்னதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது.
போலீஸாரும் அங்கு விரைந்து சென்று அம்புலன்ஸ் வண்டிக்காக காத்திருந்தபோது, அந்தப் பெண் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
தற்போது அந்தப் பெண்ணையும் அவரது குடும்பத்தினரையும் தேடி வருவதாக, பெட்டாலிங் ஜெயா போலீஸ் தலைவர் Shamsudin Mamat கூறினார்.
சமூக வலைத்தளங்களில் வெளியான வீடியோவில், அந்தப் பெண் ஒரு இறந்த பூனைக்குட்டியின் அருகில் குழப்பமான நிலையில் நிற்பது பதிவாகியுள்ளது.
அந்தப் பூனைக்குட்டி சித்திரவதை செய்தே கொல்லப்பட்டதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
எனினும், பூனைக் கொல்லப்பட்டது குறித்து அதிகாரப்பூர்வ புகார் எதுவும் போலீஸாருக்குக் கிடைக்கவில்லை.
கிடைத்ததும், கால்நடடை சேவைத் துறை விசாரிக்கும் என்றார் அவர்.



