Latestமலேசியா

சீனாவில் ஒட்டகச் சவாரியின் போது நெரிசலைக் கட்டுப்படுத்தும் பாலைவன சமிக்ஞை விளக்குகள்

பெய்ஜிங் , பிப்ரவரி-21 சீனாவின் வடமேற்கே காங்சு பாலைவனப் பகுதியில் ஒட்டகச் சவாரியின் போது நெரிசலைக் கட்டுப்படுத்த சமிக்ஞை விளக்கு பொருத்தப்பட்டுள்ளது, சுற்றுப்பயணிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.

எழில் கொஞ்சும் மணல் சூழ்ந்த மிங்ஷா மற்றும் யுவெயா ஸ்ப்ரிங் பாலைவனப் பகுதியில் இதுவரை பத்துக்கும் மேற்பட்ட சமிக்ஞை விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.

அந்த சமிக்ஞை விளக்குகளில் ‘சிவப்பு ஒட்டகம்’ மின்னும் போது அவ்விலங்கு நிற்க வேண்டும்; ‘பச்சை ஒட்டகம்’ மின்னும் போது அவை பயணத்தைத் தொடரலாம்.

இதைப் பார்க்க, ‘பாலைவனச் சாலைகள்’ போல இருப்பதாக ஒட்டகச் சவாரியில் பாலைவன அழகைக் கண்டு களிக்கும் சுற்றுப் பயணிகள் வியந்துப் போகின்றனர்.

இந்த ‘ஒட்டக சமிக்ஞை விளக்கு’ இவ்வாண்டு ஊடகங்களின் பரவலான கவனத்தைப் பெற்று, சுற்றுப் பயணிகளின் விருப்பத்திற்குரிய இடமாகவும் மாறியுள்ளது.

கடந்தாண்டு மட்டும் 37 லட்சம் சுற்றுப் பயணிகள் அங்கு வருகைப் புரிந்திருக்கின்றனர்; அவர்களில் 42 விழுக்காட்டினர் ஒட்டகத்தில் சவாரி செய்ததாக அந்த சமிக்ஜை விளக்கு திட்டத்திற்குப் பொறுப்பான நிறுவனத்தின் துணை மேலாளர் கூறினார்.

இந்த சமிக்ஞை விளக்கு பொருத்தப்பட்டதில் இருந்து சுற்றுப்பயணிகளின் வருகை கிடுகிடுவென உயர்ந்திருக்கிறது. குறிப்பாக கோவிட்-19 பெருந்தொற்றுக்கு முன் 2019-ல் இதே காலக்கட்டத்தில் இருந்ததை விட, சுற்றுப்பயணிகளின் எண்ணிக்கை 22.6 விழுக்காடு உயர்ந்திருக்கிறது.

இதனால் அங்கு ஒட்டக வளர்ப்பாளர்களின் வருமானமும் எக்கச்சக்கமாக எகிறியிருக்கிறது.
1990-ஆம் ஆண்டுகளில் அப்பகுதியில் விரல் விட்டுக் எண்ணக் கூடிய ஏழை விவசாயிகள் தான் ஒட்டக வளர்ப்பில் ஈடுபட்டு வந்தனர்.

எனினும், சுற்றுலா துறையின் அபரிமித வளர்ச்சியின் காரணமாக ஏராளமான கிராம மக்கள் தற்போது அங்கு ஒட்டக வளர்ப்பில் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளனர்.

ஆரம்பத்தில், ஒட்டகங்களின் பின்னால் நின்று புகைப்படம் எடுத்துக் கொள்வதற்கு மட்டுமே சுற்றுப் பயணிகள் அனுமதிக்கப்பட்ட நிலையில், இப்போது குறுகிய தூரத்துக்கு ஒட்டகச் சவாரி செய்ய அவர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.

சமிக்ஞை விளக்குகளின் உதவியால், ‘போக்குவரத்து நெரிசல்’ பிரச்னை இல்லாமல் சுற்றுப்பயணிகள் ஒரு மணி நேரத்திற்கு ஒட்டகச் சவாரியில் பாலைவனத்தின் அழகை ரசித்து வருகின்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!