Latestமலேசியா

சுங்கை பாக்காப் தமிழ்ப் பள்ளி கட்டுமானம்: ராமசாமி-ராயர் இடையில் தொடரும் அறிக்கைப் போர்

சுங்கை பாக்காப், ஜூலை-4, பினாங்கு, தென் செபராங் பெராய், சுங்கை பாக்காப் தமிழ்ப் பள்ளி விவகாரம் தொடர்பில் அம்மாநில முன்னாள் துணை முதல் அமைச்சர் பேராசிரியர் டாக்டர் பி.ராமசாமிக்கும், அவரின் முன்னாள் சகா RSN ராயருக்கும் இடையில் அறிக்கைப் போர் தொடருகிறது.

அவ்விஷயம் பற்றி ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினருமான ராயருக்கு போதிய புரிதல் இல்லையென சாடிய ராமசாமி, கல்வி சம்பந்தப்பட்ட விவகாரம் மத்திய அரசாங்கத்தின் அதிகாரத்தின் கீழ் வருவதை அவருக்குச் சுட்டிக் காட்ட விரும்புவதாகச் சொன்னார்.

மாநில அரசுகளால், தேசிய மற்றும் தேசிய வகைப் பள்ளிகளுக்கு நிலம் தர முடியும், நிதி கொடுக்க முடியுமே தவிர, பள்ளி நிர்வாகத்தில் தலையிடவோ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவோ முடியாது.

இது புரியாமல், துணை முதல்வராக இருந்த போது நீங்கள் ஏன் உதவவில்லை என ராயர் தம்மைப் பார்த்துக் கேட்பது வேடிக்கையாக இருப்பதாக, ராமசாமி சாடினார்.

சுமார் 150 மாணவர்களைக் கொண்ட சுங்கை பாக்காப் தமிழ்ப் பள்ளி தற்போது தனியாருக்குச் சொந்தமான ஒரு சிறிய நிலத்தில் அமைந்துள்ளது.

4 ஏக்கர் நிலப்பரப்பில் புதியக் கட்டடம் எழுப்பும் பணியும், போதிய நிதியின்றி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

அடுத்தாண்டுக்கான மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ள நிலையில், புதியப் பள்ளிக் கட்டடத்தின் கட்டுமானம் குறித்து மத்திய அரசு மௌனம் சாதிப்பதாக ராமசாமி முன்னதாகக் கூறியிருந்தார்.

இந்நிலையில், பினாங்கு அரசின் இரண்டாவது முக்கியப் பதவியிலும், மாநில தமிழ்ப்பள்ளிகளின் செயற்குழுவின் தலைவராகவும் இருந்த போது ராமசாமி ஏன் புதிய சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளியின் கட்டுமானத்தை வலியுறுத்தவில்லை என ராயர் நேற்றுக் கேள்வி எழுப்பியிருந்தார்.

சுங்கை பாக்காப் இடைத்தேர்தலில் பக்காத்தான் ஹராப்பானுக்கு எதிராக இந்தியர்கள் வாக்களிக்க வேண்டுமென, உரிமைக் கட்சியின் இடைக்கால தலைவருமான ராமசாமி அந்த தமிழ்ப் பள்ளி விவகாரத்தை எழுப்புவதாக ராயர் கூறியிருந்தார்.

இவ்வேளையில், இடைத்தேர்தலை மனதில் வைத்து திடீரென சுங்கப் பாக்காப் தமிழ்ப் பள்ளி கட்டுமானம் உள்ளிட்ட இரு திட்டங்களை அறிவித்திருக்கும் துணைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அஹ்மாட் சாஹிட் ஹமிடியின் ( Datuk Seri Ahmad Zahid Hamidi) செயலை ராமசாடி சாடினார்.

ஒருவேளை தேர்தலில் பக்காத்தான் தோற்று விட்டால் அவரின் வாக்குறுதி என்னவாகும்? தமிழ்ப் பள்ளியின் பெயரைப் பயன்படுத்தி, ஓட்டுக்காக இந்திய வாக்காளர்களை அவர் மிரட்டுகிறாரா என ராமசாமி கேட்டுள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!