Latestமலேசியா

செராஸில் 8 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: குற்றவாளிக்கு 10 ஆண்டு சிறை

கோலாலம்பூர், ஜூலை-3-செராஸில் 8 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக 49 வயது வேலையில்லாத ஆடவர் ஒருவருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 2 பிரம்படிகளும் விதித்து கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Hilmee Kusnan என்ற அந்த ஆடவர் தன் மீதான இரண்டு குற்றச்சாட்டுகளையும் ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, நீதிபதி இந்தத் தண்டனையை வழங்கினார்.

அவருக்கு பாலியல் வன்கொடுமைக் குற்றத்திற்காக 10 ஆண்டுகள் சிறை மற்றும் ஒரு பிரம்படியும், கடுமையான பாலியல் அத்துமீறல் குற்றத்திற்காக மேலும் 4 ஆண்டுகள் சிறை மற்றும் ஒரு பிரம்படியும் விதிக்கப்பட்டது.

இந்த இரு சிறைத்தண்டனைகளையும் ஏககாலத்தில் அனுபவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டதால், அவர் மொத்தம் 10 ஆண்டுகள் சிறையில் கழிக்க வேண்டும்.

கடந்தாண்டு செப்டம்பர் 4-ஆம் தேதி, செராஸில் உள்ள ஓர் அடுக்குமாடி குடியிருப்பில் இந்த கொடூரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

பாதிக்கப்பட்ட சிறுமி மின்தூக்கியில் சென்று கொண்டிருந்தபோது, அங்கு வந்த அந்த ஆடவர் சிறுமியை வலுக்கட்டாயமாகத் தனது வீட்டுக்கு இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

பின்னர் சிறுமியிடம் 3 ரிங்கிட் பணத்தைக் கொடுத்து, இதைப்பற்றி யாரிடமும் கூறக்கூடாது என மிரட்டியுள்ளார்.

அன்றைய தினமே சிறுமி தனது தோழியிடம் இதைக் கூற, அதன் மூலம் விவகாரம் சிறுமியின் தாயாருக்குத் தெரியவந்து போலீஸில் புகார் அளிக்கப்பட்டது.

சிறைத்தண்டனைக்கு மேலாக, அந்த ஆடவர் சிறையில் இருக்கும் காலத்தில் 2 ஆண்டுகள் கட்டாய மனநல ஆலோசகச் சேவையைப் பெற வேண்டும் என்றும், சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட பிறகு 2 ஆண்டுகளுக்கு போலீஸ் கண்காணிப்பில் வைக்கப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!