Latestமலேசியா

மலேசியாவில் அடுத்த ஆண்டு 40° செல்சியஸ் வெப்பம் நிலவக்கூடும்: எல் நினோ குறித்து வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

கோலாலாம்பூர், ஜூலை-2-வலுவான ‘எல் நினோ’ (El Nino) பருவநிலை மாற்றம் மற்றும் புவி வெப்பமயமாதலின் எதிரொலியாக, நாட்டில் அடுத்தாண்டு மார்ச் முதல் மே வரையிலான காலக்கட்டத்தில், தினசரி வெப்பநிலை 40 பாகை செல்சியஸ் வரை உயரக்கூடும் என மலேசிய வானிலை ஆய்வு மையமான MetMalaysia எச்சரித்துள்ளது.

ஒவ்வோர் ஆண்டும் மார்ச் மற்றும் மே மாதங்களுக்கு இடைப்பட்ட காலம் நாட்டின் வெப்பமான காலப்பகுதியாகக் கருதப்படும் வேளையில், வரலாற்றுப் பதிவுகளின்படி தினசரி அதிகபட்ச வெப்பநிலை வழக்கமாக 38 பாகை செல்சியஸைத் தாண்டும் என வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநர் ஜெனரல் Dr Mohd Hisham Mohd Anip தெரிவித்துள்ளார்.

எனினும், இவ்வாண்டு இறுதியிலோ அல்லது அடுத்தாண்டு தொடக்கத்திலோ உருவாகக் கூடும் என கணிக்கப்பட்டுள்ள பலத்த ‘எல் நினோ’ தாக்கம் காரணமாக, அடுத்தாண்டு வெப்பநிலை 40 பாகை செல்சியஸை எட்டக்கூடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த அதீத வெப்ப அலையினால் தீபகற்ப மலேசியாவின் வட மாநிலங்கள், கிளந்தான் மற்றும் பஹாங்கின் உட்புறப் பகுதிகள், மற்றும் சபா, சரவாக்கின் உட்புறப் பகுதிகள் ஆகியவை மிக அதிகமாகப் பாதிக்கப்படக்கூடிய இடங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.

இத்தகைய நீண்டகால வறண்ட மற்றும் வெப்பமான காலநிலை பொது சுகாதாரம், குடிநீர் விநியோகம், விவசாயம், மின்சார உற்பத்தி மற்றும் சுற்றுச்சூழல் ஆகியவற்றில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!