புத்ராஜெயா, மே-7, சொத்துக்களை அறிவிக்கக் கோரும் விவகாரத்தில் முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட்டை கைதுச் செய்யும் எண்ணமேதும் இல்லை என, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் MACC தெரிவித்துள்ளது.
அப்பெருந்தலைவர் மீதான விசாரணை இன்னமும் தொடருவதால், இப்போதைக்கு அவரைக் கைது செய்யும் அவசியம் ஏற்படவில்லை என MACC தலைமை ஆணையர் Tan Sri Azam Baki கூறினார்.
சொத்து விவரங்களை அறிவிக்கக் கோரும் விவகாரத்தில் MACC விசாரணை வளையத்திற்குள் வந்திருக்கும் முக்கியப் புள்ளிகளில் மகாதீரும் ஒருவர் என Azam Baki முன்னதாக உறுதிபடுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
2009 MACC சட்டத்தின் கீழ், கொடுக்கப்பட்ட கால அவகாசத்திற்குள் அனைத்து அசையும் மற்றும் அசையா சொத்துக்களின் விவரங்களை அறிவிக்குமாறு, மகாதீரின் இரு மூத்த மகன்கள் Mirzan மற்றும் Mohkzani-க்கும் MACC நோட்டீஸ் அனுப்பியிருந்தது.
தங்களது தந்தை பிரதமர் ஆன 1981-ஆம் ஆண்டில் இருந்து அக்கணக்குகளைக் காட்ட வேண்டியிருப்பதால், அவ்விருவரும் கேட்டுக் கொண்டது போல MACC அவர்களுக்குக் கூடுதல் கால அவகாசம் கொடுத்திருக்கிறது.
40 ஆண்டுகளுக்கு முன்பு சேர்த்த சொத்துக்களுக்கு இப்போது மொத்தமாகக் கணக்குக் கேட்டால் எங்கே போவது என MACC-யின் உத்தரவுக்கு எதிராக மகாதீரும் முன்னதாகக் கேள்வி எழுப்பியிருந்தார்.