புத்ராஜெயா, நவம்பர்-26, ஐந்தாண்டுகளுக்கு முன்னர் வயது குறைந்த தன் சொந்த மகளையே கற்பழித்ததோடு, இயற்கைக்கு மாறாகவும் உறவு கொண்ட கொடூர தந்தைக்கு, 32 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 22 பிரம்படிகளும் விதிக்கப்பட்டுள்ளன.
தம்மை குற்றவாளி என உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை இரத்துச் செய்யக் கோரி 51 வயது அவ்வாடவர் செய்திருந்த மேல்முறையீட்டை நிராகரித்து, புத்ராஜெயா மேல்முறையீட்டு நீதிமன்றம் அத்தீர்ப்பை வழங்கியது.
பாதிக்கப்பட்டவரின் சாட்சியங்கள் நம்பும்படியாக உள்ளதோடு, அவரின் வாக்குமூலங்களை மருத்துவ ஆதாரங்களும் ஆதரிக்கின்றன.
எனவே, அவர் குற்றவாளி என 2 கீழ்நிலை நீதிமன்றங்களும் சரியான தீர்ப்பைத் தான் வழங்கியிருப்பதாக, மூவரடங்கிய மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் குழு நேற்றையத் தீர்ப்பில் கூறியது.
இவ்வேளையில், மற்றொரு கற்பழிப்பு குற்றச்சாட்டிலிருந்து அவ்வாடவரை உயர் நீதிமன்றம் விடுவித்ததை, மேல் முறையீட்டு நீதிமன்றம் இரத்துச் செய்தது.
தனது மகளுக்கு 15 வயதிருக்கும் போது, திரங்கானு, குவாலா பெராங்கில் உள்ள வீட்டில் 2019 ஆகஸ்ட் மற்றும் நவம்பருக்கு இடைப்பட்ட காலத்தில் அக்குற்றங்களைப் புரிந்ததாக அவ்வாடர் குற்றம் சாட்டப்பட்டிருந்தார்.