ஜோகூர் பாரு, ஜூலை 23 – ஜோகூர் பாரு , Taman Botani Iskandar, Eco Galleria பகுதியில் 6 வயது சிறுமி கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் இதுவரை ஒரு பெண் உட்பட மூன்று சந்தேகப் பேர்வழிகள் கைது செய்யப்பட்டிருப்பதாக ஜோகூர் மாநில போலீஸ் தலைவர் கமிஷனர் எம்.குமார் தெரிவித்திருக்கிறார். ஜூலை 20 ஆம் தேதி சனிக்கிழமை இரவு மணி 7. 15 அளவில் அந்த சிறுமி கடத்தப்பட்டது தொடர்பில் 28 முதல் 55 வயதுடைக்குட்பட்ட மூன்று சந்தேகப் பேர்வழிகளும் விசாரணைக்கு உதவுவதற்காக கெலாங் பாத்தா (Gelang Patah) இஸ்கந்தர் புத்ரி வட்டாரத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த விவகாரம் தொடர்பில் விசாரணை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதால் தேவையற்ற ஆருடங்களை வெளியிடுவதை பொதுமக்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும் என கமிஷனர் குமார் கேட்டுக்கொண்டார். இது தொடர்பான தகவலை அறிந்தவர்கள் ஜோகூர் போலீஸ் ஏற்படுத்தியிருக்கும் 019-2792095 என்ற சிறப்பு சேவை எண்களுக்கோ அல்லது நடவடிக்கை அறையின் 07-2212 999 எண்களுக்கு அழைத்து தெரிவிக்கும்படி அவர் வலியுறுத்தினார்.
தண்டனைச் சட்டத்தின் 365ஆவது விதியின் கீழ் விசாரணையை போலீசார் மேற்கொண்டுள்ளதால் கடத்தல் நடவடிக்கையில் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக ஏழு ஆண்டு சிறை மற்றும் அபராதமும் விதிக்கப்படும் என கமிஷனர் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் நினைவுறுத்தினார். இதனிடையே தனது மகள் அல்பெர்டின் லியோ ஷியா ஹூய் ( Albertine Leo Jia Hui) பார்த்தது தொடர்பில் சமூக வலைத்தளங்களில் பொய்யான தகவல்கள் பரப்புவதை நிறுத்துக்கொள்ளும்படி அக்குழந்தையின் தாயாரான 37 வயதுடைய (Leo Qieo Xin)னும் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.