
ஜோகூர் பாரு, ஜூன் 16 – ஜோகூர் பாருவில் 4 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவத்தில், அவனது 23 வயதான ரோஹிங்கியா மாற்றாந்தாய் மீது கொலை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
ஜூன் 2ஆம் தேதி, தாமான் பெர்லிங்கில் உள்ள வீட்டில் சிறுவன் மயக்க நிலையில் கிடந்ததாக கூறப்படுகிறது. மாற்றாந்தாய் ஆம்புலன்ஸை அழைத்திருந்தாலும், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவன் உயிரிழந்திருந்தது கண்டறியப்பட்டது.
முதலில் இது திடீர் மரணமாக கருதப்பட்டது. ஆனால் பிரேதப் பரிசோதனையில் மார்புப் பகுதியில் ஏற்பட்ட பலத்த தாக்கமே மரணத்திற்குக் காரணம் என தெரியவந்ததால், வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, சிறுவனின் தந்தை, மாமா மற்றும் மாற்றாந்தாய் ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டு, பின்னர் தந்தையும் மாமாவும் சாட்சிகளாக விடுவிக்கப்பட்டனர்.
தற்போது மாற்றாந்தாய் மட்டும் கொலை குற்றச்சாட்டில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். அவருக்கு ஜாமீன் வழங்கப்படாத நிலையில், வழக்கு ஜூன் 18ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது.



