
ஹனோய் , ஜூன் 16 – இறைச்சிக்காக வெட்டப்படவிருந்த 400 புனைகளை கடத்திய திருட்டுக் கும்பலை முறியடித்த வியட்னாம் போலீசார் 40க்கும் மேற்பட்ட பூனைகளை அந்த செல்லப் பிராணிகளின் உரிமையாளர்களிடம் ஒப்படைத்தனர் என பிராணிகளுக்கான உரிமைக் குழு ஒன்று தெரிவித்தது.
பூனைகளைத் திருடுவதிலும் சேகரிப்பதிலும் நிபுணத்துவம் பெற்ற கடத்தல் கும்பலைச் சேர்ந்த ஒன்பது பேர் கடந்த வாரம் கைது செய்யப்பட்டதாக ஹோ சி மின் நகர போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
400-க்கும் மேற்பட்ட உயிருள்ள பூனைகளையும், பனிக்கட்டியில் பதப்படுத்தப்பட்ட 80 இறந்த பூனைகளையும் அதிகாரிகள் மீட்டனர். அதோடு மற்றொரு இடத்திலிருந்து மேலும் 21 பூனைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
வியட்நாமில் நாய்கள் மற்றும் பூனைகளை உண்பது சட்டப்பூர்வமானது, அங்கு பல உணவகங்கள் அவற்றின் இறைச்சியை வெளிப்படையாக விளம்பரப்படுத்துகின்றன.
இருப்பினும், விற்பனையாளர்கள் அந்த விலங்குகளின் பூர்வீகத்தைக் காட்டும் சான்றிதழ்களைப் பெற வேண்டும்.
இதனிடையே தெற்கு வியட்நாம் முழுவதும் மூன்று ஆண்டுகளாகப் பூனைகளை ஆசை காட்டிப் பிடித்து வந்ததை சந்தேக நபர்கள் ஒப்புக்கொண்டனர்.
அதிகமான வளர்ப்புப் பிராணிகளின் உயிர்களைக் காப்பாற்றிய தீர்க்கமான நடவடிக்கைக்காக வியட்னாம் பிராணிகள் நல அமைப்பு போலீஸ் துறைக்கு பாராட்டு தெரிவித்தது. இருப்பினும் மீட்கப்பட்ட 100 பூனைகள் அனுபவித்த கொடுமைகளினால் உயிரிழந்தன.



