
கோத்தா கினாபாலு, ஜூன்-16-மலேசியாவின் பல்லின சமூகங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தையும் ஒற்றுமையையும் வலுப்படுத்தும் நோக்கில், 2026-ஆம் ஆண்டுக்கான தேசிய அளவிலான ‘நல்லிணக்கக் கலந்துரையாடல்’ மாநாடு, சபா, கோத்தா கினாபாலுவில் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது.
இந்நிகழ்வை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்து உரையாற்றிய தேசிய ஒருமைப்பாட்டுத் துறை அமைச்சர் டத்தோ ஏரன் அகோ டகாங், ‘Harmoni MADANI’ என்ற புதிய யுக்தியை முன்வைத்தார்.
தேசிய ஒருங்கிணைப்பின் 4 அடிப்படைக் கொள்கைகளான புரிந்துகொள்ளுதல் (Faham), மதித்தல் (Hormat), ஏற்றுக்கொள்ளுதல் (Terima) மற்றும் கொண்டாடுதல் (Meraikan) ஆகியவற்றின் மூலமே இந்த இலக்கு முன்னெடுக்கப்படுகிறது என்று அவர் கூறினார்.
200-க்கும் மேற்பட்ட இனக்குழுக்களைக் கொண்ட மலேசியாவின் பன்முகத்தன்மை பலவீனமல்ல, மாறாக அதுவே நாட்டின் பலம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
தொழில்நுட்ப வளர்ச்சியால் ஏற்படும் சமூக ஊடக வெறுப்புப் பேச்சுகள், தவறான தகவல் பரவல் மற்றும் பிற மதங்களைப் பற்றிய போதிய அறிவின்மை போன்ற சவால்களைக் குறிப்பிட்ட அமைச்சர், வட அயர்லாந்து மற்றும் தென்னாப்பிரிக்காவின் வரலாற்று அமைதி உடன்படிக்கைகளை உதாரணமாகக் காட்டினார்.
மதங்களுக்கிடையிலான நல்லிணக்கக் கலந்துரையாடல் என்பது விவாதத்திற்கான தளம் அல்ல; மாறாக அது சமூகங்களுக்கு இடையே நம்பிக்கையை வளர்க்கும் ஒரு முக்கியப் பாலம் என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
கல்வி மற்றும் ஆக்கப்பூர்வமான கலந்துரையாடல் தளங்கள் வழியாக நாட்டின் ஒற்றுமையைப் பாதுகாக்க அரசு எப்போதும் உறுதியுடன் இருக்கும் என்றார் அவர்.



