
டுங்குன் , ஏப் 20 -இரு மாநில சட்டமன்றங்களையும் கலைப்பதற்கான இறுதித் தேதி இன்னும் வெகு தொலைவில் இருப்பதால், ஜோகூர் மற்றும் மலாக்கா மாநிலத் தேர்தல்களை ஒத்திவைக்கும் எண்ணம் அரசாங்கத்திற்கு இல்லை.
கோவிட்-19 பெருந்தொற்றின் போது தேர்தல்களை ஒத்திவைப்பதற்காக அவசரநிலையை அறிவித்த முந்தைய நிர்வாகத்தின் நடவடிக்கைகளை அரசாங்கம் மீண்டும் செய்யாது என்று துணைப் பிரதமரும், அம்னோ தலைவருமான டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஸாஹிட் ஹமிடி( Ahmad Zahid Hamidi) தெரிவித்தார். மாநில சட்டமன்றத்தைக் கலைக்கும் முடிவு, மாட்சிமை தங்கிய பேரரசர் , ஜோகூரின் இடைக்கால சுல்தான் மற்றும் மலாக்கா ஆளுநர் ஆகியோரின் அதிகாரத்திற்கு உட்பட்டது என அவர் கூறினார்.
மலாக்கா மற்றும் ஜோகூர் மாநில தேர்தலுக்கான இறுதித் தேதிக்கு இன்னும் வெகு தொலைவில் உள்ளது. தற்போதைய சூழ்நிலையில், மாநிலத் தேர்தல்களை ஒத்திவைக்கும் விருப்பம் இல்லை என்று இன்று காலை மாரா டுங்குன் ஜூனியர் அறிவியல் கல்லூரியைத் திறந்து வைத்த பிறகு செய்தியாளர்களிடம் அகமட் ஸாஹிட் இத்தகவலை வெளியிட்டார். இரு மாநிலங்களிலும் தேர்தல்களை எதிர்கொள்ள அம்னோ தயாராய் இருப்பதாகவும் அவர் வலியுறுத்தினார்.



