
பெசூட், செப்டம்பர்-14-திரங்கானு, பெசூட், Pantai Air Tawar-ரில் உள்ள மீன் வளர்ப்பு பண்ணையில் மின்சாரம் தாக்கி பல்கலைக்கழக மாணவி மற்றும் பண்ணை உரிமையாளர் ஆகிய இருவர் உயிரிழந்த சோகச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
உயிரிழந்தவர்கள் பஹாங், ஜெங்கா UiTM பல்கலைக்கழகத்தின் உயிரியல் பன்முகத்தன்மைப் பிரிவின் இரண்டாம் ஆண்டு மாணவியான 27 வயது Rubayyi Razali மற்றும் 49 வயது பண்ணை உரிமையாளர்
Wan Adilah Wan Awang என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
Rubayyi-யை அழைத்துச் செல்வதற்காக மதியம் 1 மணியளவில் பண்ணைக்கு வந்த அவரது கணவர், இருவரும் மயங்கிய நிலையில் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து உடனடியாக உதவிக் கோரியுள்ளார்.
சம்பவ இடத்தில் மின்கம்பியும் தண்ணீர் குழாயும் இருந்ததால் அவர்கள் மின்சாரம் தாக்கி உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
சம்பவ இடத்திற்கு வந்த மருத்துவக் குழுவினர் இரு பெண்களும் ஏற்கனவே உயிரிழந்து விட்டதை உறுதிப்படுத்தியதாகப் பெசூட் போலீஸ் கூறிற்று.
இரு குழந்தைகள் உள்ள Rubayyi, ஆகஸ்ட் 10 முதல் அங்கு தொழில்பயிற்சி பெற்று வந்த நிலையில், இந்த விபத்து நேர்ந்துள்ளது.
இது தொடர்பாகப் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



