Latestமலேசியா

தம்போய் விபத்தில் உயிர் தப்பிய 10 வயது சிறுவனுக்கு இன்று அவசர அறுவை சிகிச்சை; உடல்நிலை சீராக உள்ளதாகப் போலீஸ் தகவல்

தம்போய், ஜூன்-9-ஜோகூர், தம்போய் அடுக்குமாடி குடியிருப்பின் 12-ஆவது மாடியிலிருந்து விழுந்து, தனது 8 வயது தங்கை பலியான விபத்தில், அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 10 வயது சிறுவனுக்கு இன்று தீவிர அவசர அறுவை சிகிச்சை வெற்றிகரமாகச் செய்து முடிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை நிகழ்ந்த இந்த நெஞ்சை உலுக்கும் சம்பவத்தில், 12-ஆவது மாடியிலிருந்து விழுந்து பலத்த காயமடைந்த அச்சிறுவன், ஜோகூர் பாரு சுல்தானா அமீனா பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தான்.

இந்நிலையில், அவனது உயிரைக் காப்பாற்றும் நோக்கில் இன்று மருத்துவர்கள் அவசர அறுவை சிகிச்சையை மேற்கொண்டனர்.

தற்போது சிறுவனின் உடல்நிலை ஓரளவுக்குச் சீராக உள்ளதாக போலீஸ் கூறியுள்ளது.

இச்சம்பவம் நடந்த சில மணி நேரங்களிலேயே, பிள்ளைகளிடம் அலட்சியமாக இருந்து ஆபத்தில் விட்டதாகச் சிறுவர்களின் தாயாரான 37 வயது வெளிநாட்டு மாதுவை போலீஸார் அதிரடியாகக் கைதுச் செய்தனர்.

கைதுச் செய்யப்பட்டுள்ள தாயாருக்கு எதிராக 2001 சிறார் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, வரும் வியாழக்கிழமை வரை 4 நாட்களுக்கு அவரைப் போலீஸ் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து பொது மக்கள் சமூக ஊடகங்களில் வீண் வதந்திகளைப் பரப்ப வேண்டாம் என ஜோகூர் போலீஸ் கேட்டுக் கொண்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!