
மலேசியத் தமிழ் திரைப்படத் துறையில் சாதிக்கத் துடிக்கும் இளம் படைப்பாளர்களின் திறமைகளை வெளிக்கொணரும் வகையில், மலாயா பல்கலைக்கழக இந்து சங்கம் ஏற்பாடு செய்திருந்த ‘தர்மத்தின் வழி 8.0’ குறும்பட விழா மற்றும் விருது வழங்கும் நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.
2017ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இக்குறும்படப் போட்டி, கோவிட்-19 பெருந்தொற்றால் ஏற்பட்ட இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் புத்துயிர் பெற்றுள்ளது. திரைப்பட இயக்கம், நடிப்பு, திரைக்கதை மற்றும் தொழில்நுட்பம் எனப் பல்வேறு துறைகளில் ஆர்வமுள்ள இளைஞர்கள் தங்களது படைப்பாற்றலை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பை இப்போட்டி வழங்கி வருகிறது.
இந்த முயற்சிக்கு மேலும் வலுசேர்க்கும் வகையில், இவ்வாண்டு அதிகாரப்பூர்வ ஊடகப் பங்காளராக இணைந்த வணக்கம் மலேசியா, 90 விநாடி செங்குத்து வடிவக் குறும்படங்களுக்கான சிறப்புப் போட்டிப் பிரிவையும் அறிமுகப்படுத்தியது.
‘Vanakkam Malaysia 90-Second Vertical Shorties Challenge’ என்ற பெயரில் நடத்தப்பட்ட இப்பிரிவில், குறுகிய நேரத்திற்குள் கதையைச் சுவாரஸ்யமாகவும் புதுமையாகவும் சொல்லும் திறனுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.
இதில் வெற்றி பெற்ற படைப்பாளருக்கு RM1,000 ரொக்கப் பரிசுடன் சிறப்பு விருதை வணக்கம் மலேசியாவின் நிர்வாக இயக்குநர் தியாகராஜன் வழங்கி கௌரவித்தார்.
இதனிடையே, பிரதான குறும்படப் போட்டியில் பங்கேற்ற படைப்புகள் அனைத்தும் விழாவுக்கு முன்னதாகவே நடுவர்களால் பார்வையிடப்பட்டு மதிப்பீடு செய்யப்பட்டிருந்தன. அதன் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட வெற்றியாளர்களுக்கு, விழாவில் விருதுகள் வழங்கப்பட்டன.
மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் என இரு பிரிவுகளாக நடைபெற்ற போட்டியில், சிறந்த நடிகர், நடிகை, இயக்குநர், படத்தொகுப்பாளர், திரைக்கதை, சுவரொட்டி மற்றும் மக்கள் விருப்பத் தேர்வு உள்ளிட்ட பிரிவுகளில் மொத்தம் 16 விருதுகள் வழங்கப்பட்டன. இதில் சிறந்த இயக்குநருக்கான விருது டான்ஸ்ரீ அளககிருஷ்ணனின் பெயரில் வழங்கப்பட்டது தனிச்சிறப்பாகும்.
இவ்விழாவில் டத்தோஸ்ரீ எம். சரவணனின் பிரதிநிதியாகக் கலந்து கொண்ட மலாயா பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவரும் முன்னாள் செனட்டருமான டத்தோ சிவராஜ் சந்திரன், இளம் படைப்பாளர்களின் முயற்சிகளை வெகுவாகப் பாராட்டினார்.
குறுகிய நேரத்தில் சிறந்த கதையம்சம் கொண்ட குறும்படங்களை உருவாக்குவது சாதாரணமான காரியமல்ல எனக் குறிப்பிட்ட அவர், இத்தகைய திறமையாளர்களுக்கு உரிய வழிகாட்டுதலும் வாய்ப்புகளும் வழங்கப்பட்டால், மலேசியத் தமிழ் திரைப்படத் துறையில் அவர்கள் மேலும் சாதிக்க முடியும் என்றார்.
அதேவேளையில், விழாவில் திரையிடப்பட்ட குறும்படங்கள் வணக்கம் மேக்ஸ் OTT தளத்தில் இடம்பெறும் என்றும் அவர் தெரிவித்தார்.
இளம் படைப்பாளர்களை அடையாளம் காண்பதோடு, அவர்களது திறமைகளை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வதும் இப்போட்டியின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும்.
அந்த வகையில், போட்டியின் ஏற்பாடுகள், குறும்படங்களின் தேர்வு முறை மற்றும் பல்வேறு கட்டங்கள் குறித்து நிகழ்ச்சியின் திட்ட இயக்குநர் தினேஸ்வரன் ஆனந்தராஜா விளக்கமளித்தார்.
பல மாதங்களாகத் தங்களது படைப்புகளுக்காக உழைத்த இளம் கலைஞர்களுக்கு, விருது வழங்கும் தருணம் மறக்க முடியாத அனுபவமாக அமைந்தது. விருது வென்ற சிலர் தங்களது மகிழ்ச்சியையும் எதிர்காலத் திரைப்படக் கனவுகளையும் வணக்கம் மலேசியாவுடன் பகிர்ந்து கொண்டனர்.
இளம் தலைமுறையின் திரைப்பட ஆர்வத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் அதேவேளையில், மலேசியத் தமிழ் சினிமாவின் வரலாற்றைப் பாதுகாக்கும் முயற்சியையும் மலாயா பல்கலைக்கழக இந்து சங்கம் முன்னெடுத்து வருகிறது.
1969ஆம் ஆண்டு வெளியான மலேசியாவின் முதல் தமிழ்த் திரைப்படமான ‘ரத்த பேய்’ முதல் 2025ஆம் ஆண்டு வரையிலான 123 உள்ளூர் தமிழ்த் திரைப்படங்களை ஆவணப்படுத்தி, மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம்பெறச் செய்வதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இவ்வாறு, கடந்த கால மலேசியத் தமிழ் திரைப்படங்களின் வரலாற்றைப் பதிவு செய்வதோடு, எதிர்காலத் திரைப்படக் கலைஞர்களை உருவாக்குவதற்கான வாய்ப்புகளையும் ‘தர்மத்தின் வழி 8.0’ ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.
பல்கலைக்கழக மாணவர்களின் முயற்சிக்கு வணக்கம் மலேசியாவின் ஊடகப் பங்களிப்பும் சிறப்பு விருதும் கூடுதல் ஊக்கமாக அமைந்த நிலையில், மலேசியத் தமிழ் திரைப்படத் துறையின் அடுத்த தலைமுறையை அடையாளம் காணும் களமாக இந்தக் குறும்பட விழா திகழ்ந்தது.



