
பத்து பஹாட், நவ-04-ஜோகூர் Parit Yaani அருகே, Jalan Yong Peng – Muar சாலையில் நிகழ்ந்த விபத்தில் கணவன், மனைவி உயிரிழந்தது தொடர்பில், தார் ஏற்றிச் சென்ற லாரியின் 30 வயது ஓட்டுநர் நான்கு நாட்களுக்குத் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
தடுத்து வைப்பதற்கான விசாரணைக்காக, சந்தேக நபர் இன்று காலை 8.15 மணியளவில் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார். கவனக்குறைவாகவும் ஆபத்தான முறையிலும் வாகனத்தைச் செலுத்தி உயிரிழப்பை ஏற்படுத்தியதாக, 1987ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் பிரிவு 41(1)-இன் கீழ் அந்நபர் மீது விசாரணை நடைபெற்று வருகிறது. அவ்விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று சுல்தானா நோரா இஸ்மாயில் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் சுமார் 12.30 மணியளவில் நிகழ்ந்த அவ்விபத்தில், லாரியின் டயர் வெடித்ததால் ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து சறுக்கிச் சென்று, தம்பதியரும் அவர்களது இரு பிள்ளைகளும் பயணித்த MPV வாகனம் மீது மோதியதாக நம்பப்படுகிறது. அதில் MPV மோசமாக நசுங்கியது.
அச்சம்பவத்தில் Mohd Hardi Mohd Husin (46), அவரது மனைவி Tengku Syafirana Tengku Abdullah (44) ஆகிய இருவரும் தலையிலும் உடலிலும் பலத்த காயங்களுடன், தீக்காயங்களுக்கும் ஆளாகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காயமடைந்த 11 மற்றும் 8 வயதான அவர்களது இரு பிள்ளைகள் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அவர்கள் Yong Pengங்கில் உள்ள பேரங்காடி ஒன்றில் அன்றாடத் தேவைகளுக்கான பொருட்களை வாங்கிவிட்டு தங்கள் வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது அவ்விபத்து நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது.



