
கோலாலம்பூர், ஆகஸ்ட்-20- தலைநகரைச் சுற்றியுள்ள 59 கிலோமீட்டர் நீளமுள்ள முக்கிய மற்றும் அதிகாரப்பூர்வ சாலைகள் கட்டம் கட்டமாகப் புதுப்பிக்கப்படவுள்ளன. இரண்டு கட்டங்களைக் கொண்டத் திட்டங்களின் கீழ் சாலை மேற்பரப்புகளின் பயன்பாட்டு ஆயுட்காலத்தை 50 சதவீதம் வரை நீட்டிப்பது உறுதி செய்யப்படும் என கூட்டரசு பிரதேசத்திற்கான பிரதமர் துறை அமைச்சர் ஹன்னா இயோ தெரிவித்தார்.
அதன் மூலம் பராமரிப்புச் செலவுகள் 40 சதவீதம் வரை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான செலவு கணிசமானதாக இருந்தாலும், அது பயனுள்ளதாக இருக்கும். நகரவாசிகளின் நலன் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அடிப்படைச் சேவைகளை மீண்டும் முன்னிலைப்படுத்துவதே கோலாலம்பூர் மாநகர் மன்றத்தின் (DBKL) 2026-ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்டத்தின் முக்கிய நோக்கம் என அமைச்சர் வலியுறுத்தினார்.
ஐந்து வழித்தடங்களை உள்ளடக்கிய முதல் கட்டத் திட்டப் பணிகள் இம்மாதம் தொடங்கி விட்டது. அது மொத்தம் RM61.64 மில்லியன் செலவில், 24 வார கால அவகாசத்தில் படிப்படியாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது. Sultan Iskandar Highway-Jalan Damansara-Jalan Istana, Syed Putra Roundabout-Mid Valley Megamall, Jalan Sultan Ismail, Jalan Ampang ஆகியவை அவ்வழித்தடங்களில் அடங்கும்.
அடுத்த செப்டம்பர் மாதம் தொடங்கப்படவுள்ள இரண்டாம் கட்டப் பணி 24 வார காலத்தில் மூன்று வழித்தடங்களில் மேற்கொள்ளப்படவிருக்கிறது. Batu Caves Roundabout-Jalan Sultan Sulaiman Junction, Kampung Pandan Roundabout-PJD Tower ஆகியவை அச்சாலைகளில் அடங்கும்.
இவ்வேளையில், முதல் கட்ட விரிவான சாலை மறுசீரமைப்புத் திட்டத்திற்காக 100 மில்லியன் ரிங்கிட்டிற்கும் அதிகமான தொகையும், இரண்டாம் கட்டப் பணிகளுக்கு 43 மில்லியன் ரிங்கிட்டும் செலவிடப்படுவதாக கோலாலம்பூர் மேயர் Datuk Seri Fadlun Mak Ujud குறிப்பிட்டார்.
போக்குவரத்து நெரிசல் மிகுந்த நேரங்களில் இடையூறு ஏற்படாதவாறு, சாலைப் பணிகள் இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை மட்டுமே மேற்கொள்ளப்படுகின்றன. எனவே சாலைப் பயனீட்டாளர்கள் பொறுமை காக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.



