Latestமலேசியா

துன் வீ.தி. சம்பந்தனுக்கு இன்று 105-ஆவது பிறந்த நாள்; டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் வாழ்த்து!

கோலாலம்பூர், ஜூன் 16 -மலேசிய இந்தியர் காங்கிரஸ் பேரியக்கத்தில் தமிழ் மொழியை அரியணை அமர்த்திய துன் வீ. திருஞான சம்பந்தன் அவர்களுக்கு இன்று 105-ஆவது பிறந்த நாள் ஆகும். இந்த இனிய நாளை, மலேசிய இந்தியர் காங்கிரஸ் வாஞ்சையுடன் நினைவுகூர்வதில் மகிழ்ச்சியடைகிறது என அதன் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருக்கிறார். செல்வந்தராக அரசியலில் ஈடுபட்டு, இந்திய சமுதாய மேம்பாடு, கல்வி வளர்ச்சி, தமிழ்ப் பள்ளிகள், ஆன்மிக தலங்கள் என்றெல்லாம் கைவசம் இருந்த பொருட்களை இழந்து, அரசியல் அரங்கிலிருந்து ஒதுங்கிய ஒரே மலேசிய இந்தியத் தலைவர் துன் வீ.தி.சம்பந்தனார்தான். சுதந்திர மலேசியாவின் ஆட்சித் தலைமை இருக்கையிலும் அமர்ந்து பெருமை சேர்த்த சம்பந்தன், பேரா மாநிலத்தின் சுங்கை சிப்புட் நகரில் வீராசாமி-செங்கம்மாள் இணையரின் இரண்டாவது மகனாகத் தோன்றியவர்.

இந்தியாவின் சுதந்திர இயக்கத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டதன்வழி தன் அரசியல் பயணத்தைத் தொடங்கிய சம்பந்தன், சுங்கை சிப்புட் நகரில் சொந்த செலவில் தமிழ்ப் பள்ளியை நிறுவினார். மஇகா வரலாற்றில், சொந்தமாக தமிழ்ப் பள்ளியைக் கட்டியத் தலைவர் துன் சம்பந்தனார். நாட்டின் விடுதலைக்கான ஒப்பந்தத்தில் மலேசிய இந்திய சமுதாயத்தைப் பிரதிநிதித்து பிரிட்டனுக்கு வேட்டி-சட்டையுடன் சென்று கையொப்பமிட்ட துன் சம்பந்தன், தன் வாழ்க்கையில் அரசியல் உச்சத்தைத் தொட்டபோதும் கூட எளிமையின் சின்னமாக விளங்கினார்.

நாடு விடுதலைப் பெற்ற பின்னர், தோட்டத் துண்டாடலால் வேலை வாய்ப்பு பிரச்னையை எதிர்கொண்ட மலையகத் தமிழர்களுக்கு உதவும் பொருட்டு தோட்டங்களை வாங்க முனைந்த துன் சம்பந்தன், அவரது அந்த முயற்சியின் வடிவம்தான் தேசிய நில நிதி கூட்டுறவு சங்கம். அச்சங்கத்தின் தலைமையகக் கட்டடம்தான் துன் சம்பந்தன் மாளிகை. மலேசியத் தமிழர்களுக்கு தன் அரசியல் பயணத்தில் எவருக்கும் தீங்கிழைக்காத, சுயநலம் பாராத அப்பழுக்கற்ற பாதையைக் கொண்டிருந்த உன்னத தலைவர் துன் சம்பந்தனார் என டான்ஸ்ரீ விக்னேவரன் புகழாரம் சூட்டினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!