தேசியத் தீயணைப்புத்துறையின் சிறந்த சேவை விருது: பேராக்கைச் சேர்ந்த 3 இந்திய அதிகாரிகளுக்கு அங்கீகாரம்

ஈப்போ, ஜூன்-18-மலேசியத் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையான JBPM-மின் 2025-ஆம் ஆண்டுக்கான ‘சிறந்த சேவை விருது’ (APC) வழங்கும் விழா அண்மையில் நடைபெற்றது.
இவ்வாண்டு மாநில அளவில் மொத்தம் 95 அதிகாரிகள் இந்த உயரிய அங்கீகாரத்தைப் பெற்ற வேளையில், பேராக்கிலிருந்து 3 இந்திய அதிகாரிகளும் அவர்களில் அடங்குவர்.
விருது பெற்றவர்களில் PBK II இராமச்சந்திரன் மற்றும் PBK II மாரிமுத்து ஆகிய இருவரும் தங்களின் இரண்டாவது விருதையும், PBB வினோத் தனது முதலாவது விருதையும் பெற்று சாதனைப் படைத்துள்ளனர்.
தீயணைப்புத்துறையின் (மேம்பாடு) துணைத் தலைமை இயக்குநர் டத்தோ ஒஸ்மான் பின் அப்துல்லா (YAS Dato Othman bin Abdullah) இவ்வாண்டுக்கான விருதுகளை நேரில் வழங்கி சிறப்பித்தார்.
ஒவ்வோர் ஆண்டும் கடமை தவறாமல் அர்ப்பணிப்புடன் பணியாற்றும் அதிகாரிகளை கௌரவிக்கும் வகையில் தேசிய அளவில் இந்த விருது விழா நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.



