Latestமலேசியா

தேசிய அறிவியல் விழா; சிலாங்கூரின் சுங்கை ரெங்கம் தமிழ்ப்பள்ளி பிளாட்டினம் விருதையும் 2,500 ரிங்கிட்டையும் வென்றது

பெட்டாலிங் ஜெயா, நவ 27 – மலேசிய தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கிடையே அறிவியல் சிந்தனையையும் திறனையும் மேம்படுத்தும் வகையில் ASTI எனப்படும் அறிவியல் , தொழிற்நுட்ப, புத்தாக்க இயக்கம் ஆண்டுதோறும் இளம் ஆய்வாளர்களுக்கான அறிவியல் விழாவை நடத்தி வருகிறது.

இவ்வாண்டு நடத்தப்பட்ட இவ்வறிவியல் விழா நேற்று முன்தினம் தொடங்கி இரண்டு நாட்கள் நவம்பர் 25, 26ஆம் தேதிகளில் செராஸ் இம்பி மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

சிறுவயது முதலே குழந்தைகளிடையே அறிவியல் ஆர்வத்தை வளர்ப்பது என்பது அவர்களது எதிர்கால நன்மைக்கும் சமூகத்தின் முன்னேற்றத்திற்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என அஸ்தி அமைப்பின் தலைவர் முனைவர் யூனுஸ் யாசின் தெரிவித்தார்.

17ஆவது முறையாக நடத்தப்பட்ட இவ்வாண்டு போட்டியில் மொத்தம் 70 தமிழ்ப்பள்ளிகளைச் சேர்ந்த 350 மாணவர்கள் தங்களின் அறிவியல் கண்டுப்பிடிப்புகளை பொதுமக்களின் பார்வைக்கு வைத்து, அறிவியல் திறன் அடிப்படையில் தங்களது ஆய்களை மேற்கொண்டு தங்களது திறனை வெளிப்படுத்தியதாக யூனுஸ் யாசின் கூறினார்.

இம்முறை ஷா அலாம், சுங்கை ரெங்கம் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் முதல் இடத்திற்கான பிளாட்டினம் விருதை வென்று, வெற்றிக் கிண்ணத்துடன், பதக்கம், நற்சான்றிதழ், 2,500 ரிங்கிட் ரொக்க பரிசு மற்றும் அறிவியல் விழாவுக்கான சுழற்கிண்ணத்தையும் தட்டிச் சென்றனர்.

பினாங்கு பெர்மத்தாங் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் இரண்டாவது இடத்திற்கான தங்கப் பதக்கத்தை வென்று, 1,000 ரிங்கிட்டையும், மூன்றாவது பரிசை வென்ற கெடா கோ.சாரங்கபாணி தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கும் 1000 ரிங்கிட் ரொக்கம் வழங்கப்பட்டது.

நான்கு , ஐந்து மற்றும் ஆறாது இடங்களுக்கான வெள்ளிப் பதக்கங்களை முறையே சிலாங்கூரின் தெலுக் டத்தோ தமிழ்ப் பள்ளி, ஜோகூரின் மாசாய் தமிப்பள்ளி மற்றும் துன் அமினா தமிழ்ப்பள்ளி ஆகியவற்றின் மாணவர்கள் பெற்றனர்.

இப்போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் அஸ்தியின் சார்பில் வாழ்த்துக்களையும் முனைவர் யூனுஸ் யாசின் தெரிவித்துக் கெண்டார்.

இந்த நிகழ்ச்சியில் HRDF தலைமை செயல் அதிகாரி டத்தோ வீரா ஷாஹுல் டாவூட்,  மலேசிய தமிழ்பள்ளி தலைமையாசிரியர் மன்ற தலைவர் எஸ்.எஸ் பாண்டியன் உட்பட பல முக்கிய பிரமுகர்கள் சிறப்பித்தனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!