கோலாலம்பூர், நவம்பர்-26, உள்நாட்டு பொது உயர் கல்விக் கூடங்களில் இந்திய மாணவர்களுக்கு மீண்டும் 7 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும்.
பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியின் உறுப்புக் கட்சியான MIPP எனப்படும் மலேசிய இந்தியர் மக்கள் கட்சியின் தலைவர் பி. புனிதன் அவ்வாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
2017-ல் மலேசிய இந்தியர் பெருந்திட்டம் வாயிலாக அப்போதைய தேசிய முன்னணி அரசாங்கத்தால் அந்த இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது.
அப்போதையப் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜீப் துன் ரசாக்குடன், அப்போதும் துணைப் பிரதமராக இருந்த டத்தோ ஸ்ரீ அஹ்மாட் சாஹிட் ஹமிடியும், அந்த பெருந்திட்டத்தை இணைந்து அறிமுகம் செய்து வைத்தார்.
அரசாங்கப் பல்கலைக்கழகங்களில் அனைத்துப் பட்டப்படிப்புகளுக்கும் இந்திய மாணவர்களுக்கு 7 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்ற உத்தரவாதம் அந்த பெருந்திட்டத்தில் இடம் பெற்றிருந்தது.
மேற்கல்வி தவிர, பொதுச் சேவைத் துறையில் 7 விழுக்காட்டு இடங்களும், மெட்ரிகுலேஷன் கல்வியில் 2,200 இடங்களும் இந்தியர்களுக்கு வழங்கப்படுமென அறிவிக்கப்பட்டிருந்தது.
இன்று துணைப் பிரதமராக இருப்பவரும், உயர் கல்வி அமைச்சர் டத்தோ ஸ்ரீ சாம்ரி அப்துல் காடிரும் அதே தேசிய முன்னணியைச் சேர்ந்தவர்களே.
எனவே, 2017-ல் அவர்கள் கொடுத்த வாக்குறுதிக்கு அவர்கள் பொறுப்பேற்பதே நியாயமாக இருக்குமென அறிக்கையொன்றில் புனிதன் சுட்டிக் காட்டினார்.
இன்று, பல்கலைக்கழக மாணவர் சேர்க்கையில் கோட்டா முறை இல்லை, எல்லாமே தகுதி அடிப்படையிலேயே மேற்கொள்ளப்படுகிறது என சாம்ரி கூறுகிறார்.
அப்படியானால், அந்த பெருந்திட்டத்தில் அறிவிக்கப்பட்ட 7 விழுக்காட்டு இட ஒதுக்கீட்டை தற்போது நிராகரிப்பது யாரென்பது மக்களுக்குத் தெரிய வேண்டுமென்றார் அவர்.
உள்நாட்டுப் பொது உயர் கல்விக் கூடங்களுக்கான மாணவர் சேர்க்கையில் பாகுபாடு காட்டப்படுவதில்லை, தகுதி அடிப்படையிலேயே வழங்கப்படுவதாகவும், எனவே அதனை இனவாத பிரச்னையாக்க வேண்டாமென்றும் முன்னதாக சாம்ரி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.