
ஜபல்பூர், மே-2,
இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில் நிகழ்ந்த கோரமான படகு விபத்தில் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9-ஆக உயர்ந்துள்ளது.
மீட்புப் பணியின் போது கண்ட காட்சிகள் மீட்புக் குழுவினரையே கண்ணீரில் நனைய வைத்துள்ளது.
நர்மதா ஆற்றில் சுற்றுப் பயணிகள் சென்ற சொகுசுப் படகு கவிழ்ந்த விபத்தில், மாயமானவர்களைத் தேடும் பணி நேற்றுடன் நிறைவடைந்தது.
இவ்விபத்தில் இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மீட்புப் பணியின் போது, உயிரிழந்த மெரினா மற்றும் அவரது 4 வயது மகன் த்ரிஷான் ஆகியோரின் உடல்கள் ஆற்றின் அடிப்பகுதியில் இருந்து மீட்கப்பட்டன.
மரணத்தின் விளிம்பிலும் அந்தத் தாய், தனது மகனை ஒரு பாதுகாப்பு கவசம் போல இறுக்கமாகக் கட்டிப்பிடித்திருந்த காட்சி பார்ப்பவர் நெஞ்சைப் பிளப்பதாக இருந்தது.
படகில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமான சுற்றுப் பயணிகளை ஏற்றியதே விபத்துக்குக் காரணம் என தொடக்கக் விசாரணையில் தெரியவந்துள்ளது.
விதிமுறைகளை மீறிய படகு உரிமையாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநில அரசு உறுதியளித்துள்ளது.



