
அலோர் காஜா, ஏப்ரல்-17-வடக்கு-தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில், விரைவுப் பேருந்து இருக்கையை பின்னோக்கிச் சாய்த்துக்கொண்டு மிகவும் ஆபத்தான முறையில் பேருந்தை ஓட்டிய ஓட்டுநரை போலீஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோலாலம்பூரிலிருந்து ஜோகூர் பாரு நோக்கிச் சென்ற அந்தப் பேருந்தின் ஓட்டுநர், ஒரு கையை மட்டும் கொண்டு steering-கை இயக்கியதுடன், அலட்சியமாகச் செயல்பட்டது தொடக்கக் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இச்செயல் பயணிகளின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கியுள்ளதாக, அலோர் காஜா போலீஸ் தலைவர் Ahmad Abu Bakar தெரிவித்தார்.
இதனிடையே, சம்பந்தப்பட்ட பேருந்து நிறுவனமான Billion Stars Express, அந்த ஓட்டுநரை உடனடியாகப் பணி இடைநீக்கம் செய்துள்ளது.
அதே சமயம் உள் விசாரணைக்கு வருமாறு நிறுவனம் விடுத்த உத்தரவை புறக்கணித்து அந்த ஓட்டுநர் தற்போது தலைமறைவாகியுள்ளார்.
இந்தச் சம்பவம் குறித்துத் தகவல் தெரிந்தவர்கள் உடனடியாக அருகில் உள்ள போலீஸ் நிலையத்தைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.



