Latestமலேசியா

பக்திப் பரவசத்துடன் நடைபெற்ற 12வது திருமுறைப் பெருவிழா: ஈப்போ செயிண்ட் பிலோமினா தமிழ்ப்பள்ளி வெற்றி வாகை

கிள்ளான், மே-2,

மலேசிய சைவ சமயப் பேரவை மற்றும் சிலாங்கூர் தலைமையாசிரியர் கழகத்தின் ஏற்பாட்டில், 12-ஆம் ஆண்டு திருமுறைப் பெருவிழா கிள்ளான் செந்தோசா தமிழ்ப்பள்ளியில் கோலாகலமாக நடைபெற்றது.

​6 பிரிவுகளில் நடைபெற்ற திருமுறை ஓதும் போட்டியில், 90 பள்ளிகளைச் சேர்ந்த 320 மாணவர்கள் மற்றும் பெரியவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

இவர்களில் 105 பேர் இறுதிச் சுற்றுக்குத் தேர்வாகித் தங்கள் திறமையை வெளிப்படுத்தினர்.

பேரவைத் தலைவர் மருத்துவர் பழநியப்பன் பேசுகையில், மாணவர்கள் திருமுறையைப் பொருள் உணர்ந்து ஓத வேண்டும் என்றும், அதுவே இறைவன்பால் அன்புகொள்ள வழிவகுக்கும் என்றும் வலியுறுத்தினார்.

​இவ்வேளையில், கெர்லிங் நகரில் 50 மில்லியன் ரிங்கிட் செலவில் புதிய சைவக் கோயிலும், சமய ஆசிரியர்களை உருவாக்கும் கல்லூரியும் அமையவிருப்பதாக முனைவர் நாகப்பன் ஆறுமுகம் அறிவித்தார்.

அரசாங்க அனுமதியுடன் கட்டுமானம் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், ஒவ்வோர் இந்துவும் அருட்கொடையை வழங்க முன்வர வேண்டுமெனக் கேட்டுக் கொண்டார்.

​இவ்வாண்டு முதன்முறையாக அறிமுகம் செய்யப்பட்ட ‘சைவப் பேரவை’ சுழற்கிண்ணத்தை, ஈப்போ செயிண்ட் பிலோமினா தமிழ்ப்பள்ளி தட்டிச் சென்றது.

​சுமார் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து சிறப்பித்த இவ்விழா, பக்தி மணத்துடன் இனிதே நிறைவுற்றது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!