மாச்சாங், மே-17, பள்ளிகளில் ஆசிரியர் தினக் கொண்டாட்டங்களில் பங்கேற்க எதிர்கட்சி அரசியல்வாதிகளை அனுமதிக்கவில்லை எனக் கூறி, பெர்சாத்து இளைஞரணி தலைவர் Wan Ahmad Fayhsal Wan Ahmad Kamal கல்வி அமைச்சை சாடியுள்ளார்.
ஒற்றுமை அரசாங்கத்தைச் சாராத அரசியல்வாதிகள் பள்ளிகளுக்கு கேக் அனுப்புவதை பள்ளி முதல்வர்களும் தலைமையாசிரியர்களும் அனுமதிக்காதிருப்பதை உறுதிச் செய்யுமாறு, மாநில மற்றும் மாவட்ட கல்வி இலாகாக்களுக்கு கல்வி அமைச்சின் மூத்த அதிகாரியிடம் இருந்து உத்தரவு பறந்திருப்பதாக Whatsapp-பில் வைரலாகியுள்ளது.
அதன் screenshot-டை தனது X தளத்தில் பதிவேற்றி Wan Fayhsal காட்டமாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அமைச்சின் அவ்வுத்தரவால் கிளந்தான், மாச்சாங் தொகுதிக்குட்பட்ட பள்ளிகளில் தம்மாலும் ஆசிரியர் தினக் கொண்டாட்டங்களில் பங்கேற்க இயலவில்லை எனக் கூறி மாச்சாங் நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் ஆசிரியர்களிடம் வருத்தம் தெரிவித்தார்.
இது கண்டிப்பாக அமைச்சரின் வேலையாகத் தான் இருக்கும்; பாவம் அதிகாரிகள் என்ன செய்வார்கள், உத்தரவைப் பின்பற்றுவது தானே அவர்களின் வேலை என Wan Fayhsal ஏமாற்றத்துடன் கூறினார்.
எதிர்கட்சியினராக இருந்தாலும் நாங்களும் மக்கள் பிரிதிநிதிகளே; தொகுதி மக்களைச் சந்திக்க எங்களும் உரிமை உண்டு. நாங்கள் ஒன்றும் தீவிரவாதிகள் அல்லவே என அவர் கடுமையாகச் சாடினார்.
முன்பு எதிர்கட்சியாக இருந்த போது எதையெல்லாம் எதிர்த்தார்களோ, இப்போது அதிகாரம் கைக்கு வந்து விட்ட பிறகு அவற்றையெல்லாம் செய்து வருவதுதான் இந்த மடானி அரசின் கலாச்சாரம் என்றும் Wan Fayhsal X தளத்தில் கூறியுள்ளார்.
Whatsapp-பில் பரவிய அவ்வுத்தரவு உண்மையானதா என்பது குறித்து அமைச்சு இதுவரை கருத்துரைக்கவில்லை.