
தெமர்லோ, ஆகஸ்ட்-23 – பஹாங்கில் பாம்பு பிடிக்கும் செயல்விளக்க நிகழ்ச்சியின் போது, ராஜநாகம் தீண்டியதில் மலேசியப் பொது தற்காப்புப் படையான APM-மின் அதிகாரி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
39 வயதான சார்ஜன் Muhamad Muazam Shah Kamardin என்ற அந்த அதிகாரி, தெமர்லோவில் உள்ள தாமான் தெமர்லோ ஜெயா மண்டபத்தில் நடைபெற்ற தேசிய ஆரோக்கிய நிகழ்ச்சி ஒன்றில் பொதுமக்களுக்குப் பாம்பு பிடிக்கும் செயல்விளக்கம் செய்து காட்டிக் கொண்டிருந்தார்.
அப்போது, எதிர்பாராத விதமாக ராஜநாகம் அவரது விரல் நகப் பகுதியில் தீண்டியது.
உடனடியாக கைகளைக் கழுவச் சென்ற அவர், திடீரென மயங்கி விழுந்தார்.
அங்கிருந்தவர்களால் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக சுல்தான் ஹஜி அஹ்மாட் ஷா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர்.
உயிரிழந்த அதிகாரியின் மறைவுக்கு APM நிர்வாகமும் பொது மக்களும் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.



